தமிழக வெற்றிக் கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன், நடிகர் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காகவே இத்தனை உயர்நிலையில் இருந்து அனைத்தையும் விட்டுவிட்டு விஜய் வந்திருக்கிறார்.
கோவை விமான நிலையத்தில் இன்று (மார்ச் 16) செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையனிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. NDA கூட்டணியில் தவெக இணைய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, “இதுவரை எந்த கருத்துக்களும் பரிமாறப்படவில்லை” என்று அவர் பதிலளித்தார்.
NDA-வில் துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து பேச்சு நடைபெறுவதாக தகவல் வருகிறதே? என்ற கேள்விக்கு, “பல்வேறு உயர் மட்டத்தில் இருந்து, உயர்ந்த இடத்தில் இருந்து மக்கள் பணியாற்ற விஜய் வந்திருக்கிறார். மக்களும் அதை ஏற்றுக்கொண்டு, அவர்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்தான் தமிழகத்தின் முதலமைச்சர் என்பதை யாராலும் மாற்ற முடியாது.
பவன் குமார் விஜய்யிடம் பேசியதாக தகவல் வருகிறதே? என்ற கேள்விக்கு, “அப்படியான எந்த தகவலும் எனக்கு எட்டவில்லை” என்றார்.
சிபிஐ மூலம் அழுத்தம் கொடுக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு, “நேற்று விஜய் டெல்லி அழைக்கப்பட்டார். அங்கு சென்று அதற்கான பதிலை அளித்துவிட்டார்.” என்றார்.
மேலும் முதலமைச்சர் என்பதற்காகவே இத்தனை உயர்நிலையில் இருந்து அனைத்தையும் விட்டுவிட்டு விஜய் வந்திருக்கிறார். அவர்தான் முதலமைச்சர் என்ற நிலையில்தான் மக்களும் இருக்கின்றனர்.வரும் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி கிடைக்கும். நேற்று ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களில் முகாம் நடத்தினோம். இதுவரை இப்படியான கூட்டத்தைப் பார்த்ததில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு வருவதைப் போல மக்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். மாற்றம் வேண்டும், புதிய நல்லாட்சி வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். விஜய் சிறந்த தலைவராக உருவெடுத்திருக்கிறார்.” என்றார்.
அதேபோல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன, தொழில் அதிபர்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர் என்று சுட்டிக்காட்டிய செங்கோட்டையன், “மீண்டும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கின்றனர். மாற்றத்தை உருவாக்கும் திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளது, வேறு யாருக்கும் இல்லை.தேர்தல் ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 234 தொகுதிகளிலும் போட்டியிட சிறந்த வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்” என்றும் தெரிவித்தார்.
இறுதியில், “தவெக தலைவர் விஜய் தனிப்பட்ட விவகாரங்கள் பாதிப்பை ஏற்படுத்துமா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு பதில் அளிக்காமல் செங்கோட்டையன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
