அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறிய அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனின் கட்சி பதவியை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார்.
திண்டுக்கல்லில் மூத்த நிர்வாகிகளிடம் நடந்த ஆலோசனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஆலோசனை கூட்டத்தை முடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி வெளியே வரும் போது செய்தியாளர்கள், செங்கோட்டையன் பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
இதற்கு கையை மட்டும் காண்பித்துவிட்டு காரில் ஏறி புறப்பட்டுவிட்டார்.
இந்தநிலையில் ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் 6) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “ என்னை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். பொதுவாக ஜனநாயக முறையில் கட்சியில் இருந்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும். இன்று, ஜானநாயகத்தை நாங்கள் காக்கிறோம். சுயமரியாதையோடு யார் வேண்டுமானாலும், எந்த கருத்தை வேண்டுமானாலும் சொல்ல எங்கள் இயக்கத்தில் தடை இல்லை என்று பல மேடையில் சொல்லியிருக்கிறார். ஆனால் விளக்கம் கேட்காமலயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லும்” என்றார்.
கேள்வி பதில்
உங்களுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
நேற்று நான் சொன்னது போல எனது பணி தொடரும்
நேற்று நீங்கள் பேசும் போது மூத்த அமைச்சர்கள் பலரும் ஒன்றாக சேர்ந்துதான் செயல்படுகிறோம் என்று சொன்னீர்கள். இதுவரை யாரும் உங்களை வந்து சந்திக்கைவில்லையே?
சில பேர் என்னிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார்கள். அவ்வளவுதான் சொல்ல முடியும். எல்லாம் போக போக தெரியும்.
கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதை தொடர்ந்து தொண்டர்கள் புரட்சி தொடங்கிவிட்டது என சொல்கிறார்களே?
ஒவ்வொருவரின் கருத்தையும் ஒவ்வொரு பத்திரிகைகள் மூலம் பிரதிபலிக்கலாம்.
கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது உங்களுக்கு முன்கூட்டியே தெரியுமா?
நான் எதிர்பார்க்கவில்லை.
இதற்கு பின்னால் வேறு யார் இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?
அதை இப்போது சொல்வதற்கு இல்லை.
தொண்டர்கள் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படியானால் யாருதான் அந்த கருத்தை வெளிப்படுத்துவது. அதிமுகவுக்கு நல்லது என்பதால் தான் எனது கருத்தை தெரிவித்தேன்.