தவெகவில் வேட்பாளர்களை தேர்வு செய்யவே கஷ்டப்பட்டு உள்ளார்கள் என்ற வேலுமணியின் கருத்து மக்கள் தீர்ப்பால் தூள் தூளாக்கப்படும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் இன்று (மார்ச் 29) சென்னையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த செங்கோட்டையன் கோபி செட்டி பாளையத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து இன்று இரவு கோவை வந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக 234 தொகுதிகளிலும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் உரையைக் கேட்கும் பொழுது நாடு வியக்கும் அளவிற்கு ,
புதிய மறுமலர்ச்சி உருவாக்கும் வகையில் அவரது உரை அமைந்திருந்தது.
தமிழகத்தில் நல்லாட்சி தருவதற்கு தூய்மையான ஆட்சி தருவதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக மட்டும் தான் முடியும். பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கின்ற அரசாக , இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கின்ற அரசாக இருக்கும். ஆண்டு முடித்தவர்கள், ஆண்டு கொண்டு இருப்பவர்களை காட்டிலும் புதிய ஆட்சி வேண்டும் என்பது மக்களின் கனவாக இருக்கிறது. எதிர்கால தமிழகம் இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக இருப்பதாக அவரது உரை அமைந்துள்ளது.
வருகின்ற 2026 ல் விஜய் ஆட்சியில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. மக்கள் சக்தி அவருக்கு பின்னால் இருக்கிறது. கோபியில் எட்டு முறை , சத்தியமங்கலத்தில் ஒரு முறை என ஒன்பது முறை வெற்றி பெற்றிருக்கிறேன்.
தற்பொழுது தவெகவில் கோபியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறேன், மக்கள் ஆதரவு இருக்கிறது, மக்களுக்கு செய்திருக்கின்ற பணியின் காரணமாகவும் ,
40 ஆண்டுகள் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் எனது பணிகள் இருந்துள்ளது. மக்கள் சக்தியை, தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம் என்றார்.
இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, “அதிமுக இயக்கத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டவன் நான். சாதாரண உறுப்பினராக கூட இருக்கக் கூடாது என சரித்திர வரலாற்றில் இல்லாத அளவிற்கு தூக்கி எறியப்பட்டவன். அதனால் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன். இங்கு இளைஞர்கள், பெண்கள் , படித்தவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் என வரவேற்பதை பார்க்கும்போது அவரது சக்தி மிகப்பெரிய சக்தி ஆக இருக்கிறது. அதை நாடே அறியும்” என்றார்.
தவெகவில் வேட்பாளர்கள் தேர்வுக்கு கஷ்டப்பட்டு உள்ளார்கள் என முன்னாள் அமைச்சர் வேலுமணி தெரிவித்து இருப்பது குறித்த கேள்விக்கு, “நாளை காலம் மாறும். மக்கள் தீர்ப்பால் வேலுமணி என்ன கருதுகின்றாரோ அந்த கருத்துக்கள் அனைத்தும் தூள் தூளாக்கப்படும்.
விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, “ஜெயலலிதா உட்பட எல்லாத் தலைவர்களும் இரண்டு தொகுதியில் போட்டியிடுவார்கள்” என தெரிவித்தார்.
