நான் அமைதியாக இருப்பது வெற்றிக்கான அறிகுறி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிச்செட்டிப்பாளையத்தில் இன்று (அக்டோபர் 3) அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.
“கரூர் சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. இதயமே வெடித்து விடும் போல் உள்ளது. இதுபோன்ற சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில் நடந்தது இல்லை. கரூரே கண்ணீர் கடலில் உள்ளது. கரூர் சோக சம்பவத்திற்கு எனது ஆழ்ந்த ஆனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் நலமுடன் வீடு திரும்ப ஆசைப்படுகிறேன்” என்றார்.
இதைத்தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகியவர்களை ஒருங்கிணைப்பது எந்த அளவில் உள்ளது என்ற கேள்விக்கு, ‘நீங்கள் தான் கூற வேண்டும்’ என பதிலளித்தார்.
உங்களது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்படுகிறார்களே என்ற கேள்விக்கு, ‘பொருத்து இருந்து பாருங்கள். நான் அமைதியாக இருப்பது வெற்றிக்கான அறிகுறி. யாவும் நன்மைக்கே. விரைவில் நன்மை நடக்கும். அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை ’ என்றார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து இதுவரை எந்த ரியாக்ஷனும் இல்லை என்ற கேள்விக்கு, போத் சைடும் ரியாக்ஷன் இல்லை பார்த்தீர்களா என்று குறிப்பிட்ட செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையம் வழியாக வருவதாக எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.