அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசியல் வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வரும் அ.தி.மு.கவின் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன். நேற்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்துக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸுடன் சென்றார். பின்னர் அங்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் சேர்ந்து இருவரும் தேவருக்கு மாலை அணிவித்தனர்.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ‘என்னை அதிமுகவில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான்’ என்று கூறினார்.
செங்கோட்டையன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடனும் கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனை செய்தார். அதன்பிறகு செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும்,
அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் எம்.எல்.ஏ, (கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
அதிமுகவினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 6 அன்று, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தபோது, பழனிசாமி அதை திட்டவட்டமாக மறுத்ததோடு, உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேசுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
