ADVERTISEMENT

கொங்கு மண்டல நிகழ்ச்சியில் பங்கேற்காத செங்கோட்டையன்… என்ன நடந்தது? அருண் ராஜ் விளக்கம்!

Published On:

| By Kavi

தவெக மேற்கு மண்டல மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது குறித்து அருண்ராஜ் விளக்கமளித்துள்ளார்.

தவெக “மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி” மேற்கு மண்டலம் சார்பாக இன்று (பிப்ரவரி 7) கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் கொங்கு மண்டத்தின்  முக்கிய அரசியல் புள்ளியாக இருந்து வரும் தவெக  நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. 

ADVERTISEMENT

எனவே அவர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதிலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்தது. 

இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக மூத்த நிர்வாகி அருண் ராஜிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

இதற்கு அவர்,  “ஒவ்வொரு குழுவிற்கும் தலைவர் தனித்தனியாகப் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். இது பிரத்தியேகமாக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு. அண்ணன் செங்கோட்டையன் தேர்தல் பிரச்சாரக் குழுவில் முக்கிய உறுப்பினராக இருக்கிறார். நீங்கள்  தேவையில்லாமல் ஒரு பிரச்சினையை உருவாக்க முயற்சி செய்கிறீர்கள். தலைவர் எல்லோருடைய திறமையையும் புரிந்து கொண்டு அனைவருக்கும் உரிய இடத்தைத் தந்துள்ளார்” என்று பதிலளித்தார். 

மேலும் அவர்,  “நேற்று ஒரே நாளில் பல ஆயிரம் மக்கள் விருப்ப மனுக்களை வாங்கிச் சென்றனர். யாருக்கும் இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காக, ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே ஆன்லைன் மூலமாகவும், ஈமெயில் வழியாகவும் மனுக்களைப் பதிவேற்றம் செய்யலாம்” என்றும் குறிப்பிட்டார். 

ADVERTISEMENT

எங்கள் கட்சியிலிருந்து நல்ல வேட்பாளர்கள் தேர்ந்தெடுப்படுவார்கள் என்று கூறிய அவர்,  “எங்கள் தலைவரின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. குறிப்பாக, புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக வெற்றிக் கழகத்திற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது போல் தெரிகிறது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை என்று கூறுவது பாரபட்சமானது. காவல்துறையினர் தங்கள் பொறுப்புகளை எங்கள் மீது திணிக்கப் பார்க்கிறார்கள். சேலம் கூட்டத்திற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share