தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், மத்திய – மாநில அரசுகளின் உறவுகள் குறித்த ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழு அறிக்கையின் முதல் பகுதியை முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 18) வெளியிட்டார்.
அது குறித்து பேசிய முதல்வர் “அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசு கபளீகரம் செய்யும் சூழலில், ஆளுநர்கள் மூலமாக மாநில அரசுகளை செயல்படாமல் தடுக்கும் நிலையில், இந்தித் திணிப்பின் மூலமாக, நிதி நெருக்கடிகளின் மூலமாக தொகுதி மறுவரையறை என்ற சதியால், ஜிஎஸ்டியால் தமிழ்நாடு அனுபவித்து வரும் நெருக்கடிகளிலிருந்து மீள ஒரே மருந்து மாநில சுயாட்சி தான்” என தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, “முதல்வர் கொண்டு வந்த மாநில சுயாட்சி பரிந்துரையை தமிழ்நாடு காங்கிரஸ் பேரியக்கம் வரவேற்கிறது. இன்றைய காலகட்டத்திற்கு இது தேவையானது. பிஜேபி ஆளாத மாநிலங்களில் எல்லா உரிமைகளையும் பறிக்கும் முயற்சியில் தொடர்ந்து பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. ஆகவே ஆளுநர் மூலமாக மாநிலங்களை ஆள வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்பதில்லை..பொருட்படுத்துவதில்லை. அரசியலமைப்புச் சட்டத்தை எப்படியெல்லாம் சிதைக்க வேண்டுமோ அப்படி எல்லாம் சிதைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
கே.சி. வேணுகோபால் கருத்து தெரிவித்த சமயத்தில் இன்றைக்கு மாணிக்கம் தாகூர் பாரதியாரின் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற கவிதையை தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டது குறித்த கேள்விக்கு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதை கவனித்து கொள்ளும் என்று பதிலளித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
