செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கனஅடி நீர் திறந்தது பற்றி தன்னிடம் எதுவும் சொல்லாதது குறித்து அதிகாரிகளை செல்வப்பெருந்தகை கடிந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
தொடர் மழை காரணமாக நீர் நிலைகளிலும் நீர்மட்டம் கடுமையாக உயர்ந்தது. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னையின் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியும் மழையால் வேகமாக நிரம்பி வந்தது. தொடர்ச்சியாக நீர்வரத்து அதிகாமனதை அடுத்து, நேற்று மாலையில் விநாடிக்கு 100 கனஅடி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்டது.
நேற்று இரவும் கனமழை தொடர்ந்ததால் நீர்வரத்து மேலும் அதிகரித்தது. குறிப்பாக இன்று காலை செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2,220 கனஅடி நீர் வரத்து அதிகரித்தது. இதனால் இன்று 500 கனஅடி நீரை திறந்துவிடப்பட்டது.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவுமான செல்வப்பெருந்தகை செம்பரம்பாக்கம் ஏரியில் சென்று பார்வையிட்டார்.

அப்பொழுது ஏரியில் இருந்து 500 கனஅடி நீர் திறந்தது பற்றி தன்னிடம் எதுவும் சொல்லாத அதிகாரிகளை செய்தியாளர்கள் முன்னிலையே அவர் கடிந்து கொண்டார்.
அவர் பேசுகையில், “ஒரு மக்கள் பிரதிநிதிக்கு தெரியல.. சேர்மனுக்கு தெரியல. மந்திரிக்கு தெரியல.. எம்.எல்.ஏக்களுக்கு தெரியல.. நீங்களே திறந்து விடுகிறீர்கள் என்றால் என்ன அர்த்தம் சார்.. நீங்களே சொல்லுங்க.. நீர்வளத்துறை அரசு தானே? மக்கள் பிரதிநிதிகளிடம் ஒரு வார்த்தை சொன்னால் என்ன? மரபு என்ன?.. ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமா..
நானும் ஒரு மூன்று வருஷமாக திறந்துவிட்டு இருக்கிறேன்.. இதே மாதிரி போன வருஷமும் இப்படித்தான் சொல்லாமல் நீங்களே திறந்துவிட்டுவிட்டீர்கள். தப்பு கிடையாது. நீங்களே திறங்க.. ஆட்சியாளர்கள் நீங்களே செய்யுங்க.. மக்கள் நல்லா இருந்தா சரி தான்.
ஆனால் இப்போது நான் தானே ஊர் ஊறாக போகப் போறேன்… 500 கன அடி திறந்துவிட்டிருக்கிறோம். பாதுகாப்பாக இருங்க என்று சொல்லப்போகிறோம்.. நீங்களே எல்லாத்தையும் செஞ்சிட்டா எப்படி.. தப்பு தானே? நீங்களே மக்கள் பிரதிநிதியாயிட்ட அரசு எதற்கு? அதிகாரிகளே ஆட்சியை நடத்தலாமே? இந்த துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கு என்றே தெரியவில்லை” என செல்வப்பெருந்தகை ஆதங்கத்துடன் பேசி அங்கிருந்து சென்றார்.
