பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார். எதைத் தின்றால் பித்தம் தெளியும் எனத் தெரியாமல் இருக்கிறார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று (ஜனவரி 12) செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, நீலகிரி மாவட்டத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி வருகிறார் என்றார். அதற்கான ஏற்பாடுகளுக்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. நாளை ராகுலுடன் தனியார் பள்ளி விழாவிலும், சமத்துவ பொங்கல் விழாவிலும் கலந்துகொள்ள உள்ளோம் என்று கூறினார். மேலும் கூடலூரில் ராகுல் காந்தி கலந்துகொள்வது முழுக்க முழுக்க பள்ளி நிகழ்ச்சி; இதில் அரசியல் கலப்பு இல்லை என்றும், பள்ளி விழாவிலும் பொங்கல் விழாவிலும் கலந்துகொள்கிறார் என்றார்.
மும்பை மகாராஷ்டிராவின் ஒரு பகுதி அல்ல என்ற அண்ணாமலையின் பேச்சு குறித்த கேள்விக்கு, “அண்ணாமலை மகாராஷ்டிரா, மும்பை பற்றி பேசுவார்; ஆனால் தமிழகத்தைப் பற்றி பேச மாட்டார். தமிழகத்தைப் பற்றி அறிவுப்பூர்வமாகவோ, நாகரிகமாகவோ பேச மாட்டார்” என்று காட்டமாகத் தெரிவித்தார்.
மேலும் கூட்டணி குறித்த கேள்விக்கு, “இந்தியா கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகள் எங்கெல்லாம் ஆட்சி செய்கின்றனவோ, அங்கெல்லாம் காங்கிரஸுக்கு பொறுப்புண்டு. அதை காங்கிரஸ் ஆட்சியாகத்தான் பார்க்கிறோம் என்றார். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கிறது; அவர்கள் கருத்தைப் பதிவு செய்கிறார்கள். ஆனால் முடிவு எடுப்பது எங்கள் தேசியத் தலைமையும், தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் ஸ்டாலின் தலைமையும்தான். இரண்டு தரப்பு தலைவர்களும் சேர்ந்துதான் முடிவு எடுப்பார்கள்.இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது; எஃகுக் கோட்டையாக இருக்கிறது. இது கொள்கை அடிப்படையில் உருவான கூட்டணி.
மதவாதிகளை தமிழ் மண்ணில் ஊடுருவ விடக்கூடாது என்பதற்காகவும், தமிழக மக்களை காக்கவும் உருவானது இந்தியா கூட்டணி. எங்கள் தலைமை வேறு யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காங்கிரஸுக்கு கொள்ளைப் புற அரசியல் செய்யும் பழக்கம் கிடையாது. நேரடியாக அரசியல் செய்வோம். அகில இந்திய தலைமை திமுகவுடன் பேச குழு அமைத்திருக்கிறது; வேறு யாருடனும் பேச சொல்லவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை மைக் முன்பு சொல்ல முடியாது; அறையில்தான் பேசுவோம்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொது வெளியில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என பலமுறை சொல்லியிருக்கிறேன். கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இனிமேல் கருத்துகளைப் பேச மாட்டார்கள்”என்றார்.
கூட்டணிக்கு எதிராக பேசுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற கேள்விக்கு, “அது குறித்து அகில இந்திய தலைமையிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள்” என்று தெரிவித்தார்.
