ADVERTISEMENT

மக்கள் பிரதிநிதியை பிச்சைக்காரன் என இழிவுபடுத்துவதா? – செல்வப்பெருந்தகை கண்டனம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Selvaperunthagai condemns Edappadi Palaniswami

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (செப்டம்பர் 24) நீலகிரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குறித்து பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

மேலும், ’பிச்சைக்காரன் ஒட்டு போட்ட சட்டையில் வருவது மாதிரி பல கட்சிகளில் இருந்து வந்தவர். எந்த கட்சிக்கு போகிறாரோ அந்தந்த கட்சிகளின் கொள்கையை கொண்டாடுவார்’ என செல்வப்பெருந்தகை மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு செல்வப் பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை ‘பிச்சைக்காரன்’ என்று இழிவுபடுத்துவது, ஒரு தனிநபரை பழிக்கிற செயல் மட்டுமல்ல, இது கோடிக்கணக்கான ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் மதிப்பையும் வாழ்க்கையையும் இழிவுபடுத்தும் செயலாகும். இத்தகைய விஷம கருத்து, எவ்வளவு ஆழமாக அரசியலில் சமூக விரோத எண்ணங்கள் புதைந்துள்ளன என்பதையும், உண்மையான சிரமங்களை அறியாத செழிப்பின் அகந்தையையும் வெளிப்படுத்துகிறது. மக்களின் நம்பிக்கையை நாடுவது பிச்சை கேட்பது அல்ல, அது ஜனநாயகத்தின் அடித்தளம்.

ADVERTISEMENT

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் பாதையில் பயணித்து, விளிம்புநிலை மக்களின் வாக்குகளால் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், இறுதியில் ஊர்ந்து சென்று முதல்வராகவும் ஆனீர்கள். ஆனால், இன்று மக்களின் வலிகளையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் பார்க்க முடியாத அளவுக்கு நீங்கள் தூரத்தில் நிற்கிறீர்கள்.

டெல்லியில் முகத்தை மறைத்துக் கொண்டு, வேறொருவரின் சொகுசு பென்ட்லி காரில் (Bentley) பயணிக்கிறீர்கள். அப்போது உங்களுக்கு எப்படி இந்த நாட்டின் ஏழைகள் எதிர்கொள்கின்ற துயரங்களும் நெருக்கடிகளும் தெரியும், புரியும்?

ADVERTISEMENT

என்னை ‘பிச்சைக்காரன் – ஒட்டு போட்ட சட்டை’ என்று அழைக்கும் போது, என்னை மட்டுமல்ல, எளிமையான நிலைமையில் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் மரியாதையையும் மதிப்பையும் இழிவுபடுத்துகிறீர்கள். நான் கிழிந்த துணி அணிந்திருந்தாலும், அந்த துணியில் இந்த நாட்டின் அடித்தட்டு மக்களின் கண்ணீர், கனவுகள், நம்பிக்கைகள் உள்ளன.

விளிம்புநிலையில் உள்ள மக்களால் அளிக்கப்படும் வாக்குகளே என் குரலாகவும், என் அரசியல் அடையாளமாகவும் இருக்கின்றன. அவர்கள் சுயமரியாதைக்கும், அன்றாட வாழ்வுப் போராட்டத்திற்கும் நான் கடமைப்பட்டவன். அந்த மரியாதையும் அந்தப் போராட்டமும், எவரின் அவமதிப்புக்கும் உரியவை அல்ல.

எடப்பாடி பழனிசாமியின் ஜனநாயக விரோதக் கருத்தை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஆதரிக்கிறீர்களா.?” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share