ராஜன் குறை
பெரும்பாலான அரசியல் விவாதங்களில் கொள்கைக் கூட்டணி நல்லது, சந்தர்ப்பவாதக் கூட்டணி தவறு என்று சொல்கிறார்கள்! அதில் என்ன பிரச்சினை என்றால் ஏன் கொள்கை மாறுபாடு உள்ளவர்களுடன் கூட்டணி வைக்கிறீர்கள் என்றால் எல்லோரும்தான் வைத்திருக்கிறார்கள் என்று வரலாற்று உதாரணங்களை சொல்கிறார்கள்! ராஜாஜியும், அண்ணாவும் கூட்டணி வைக்கவில்லையா, தி.மு.க பாஜக-வுடன் கூட்டணி வைக்கவில்லையா என்றெல்லாம் கேட்கிறார்கள்!

சந்தர்ப்பவாதம் என்பது விசாரணைக்கு உட்பட்டது. கொள்கை மாறுபாடுகளை பொருட்படுத்தாமலும் கூட கூட்டணி வைக்குமளவு தீவிரமான கள அரசியல் முரண்பாடு நிலவுகிறதா என்பதே சந்தர்ப்பத்தைத் தீர்மானிக்கும். கொள்கையை காப்பாற்ற சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப இயங்க வேண்டியது இருக்கும் என்பதால் சந்தர்ப்பவாதம் என்பது முற்றிலும் சமரசமல்ல.
உதாரணமாக பெரும் அரசியல் மேலாதிக்க சக்தியாக விளங்கிய காங்கிரசை எதிர்கொள்ள காங்கிரஸ் எதிர்ப்பியம் (anti-Congressism) என்ற கோட்பாட்டை சோஷலிஸ்டு ராம் மனோகர் லோஹியா முன்வைத்தார். காங்கிரஸை எதிர்க்கும் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார். பல போராட்டங்களில் வலுதுசாரி ஜனசங்கத்துடன் இணைந்தார்.
இதன் தொடர்ச்சியாக நெருக்கடி நிலைக்குப் பிறகு வலது சாரிகள், இடதுசாரி சோஷலிஸ்டுகள் எல்லோரும் இணைந்து ஜனதா கட்சி என்ற ஒன்றைத் தோற்றுவித்தார்கள். கருத்தியல் அவியலாக இருந்தாலும் அந்த சந்தர்ப்பத்தில் வேறு வழியிருக்கவில்லை எனலாம். மூன்றே ஆண்டுகளில் அந்த கட்சி சிதறிவிட்டது.
அது போன்ற அரசியல் சந்தர்ப்பங்கள், நிர்பந்தங்களில் கூட்டணி சேர்வது வேறு. சந்தர்ப்பவாத கூட்டணி தவறு என்று சொல்லிவிட்டு அரசியலில் எல்லாம் சகஜம் என்பதும், கொள்கை எதிரி வேறு, அரசியல் எதிரி வேறு என்று மாய்மாலம் செய்வதும் பிழையானது. உண்மையாக கொள்கைக்கோ, சந்தர்ப்பத்திற்கோ மதிப்புக் கொடுக்காமல் சுயநல அரசியலுக்கு இந்த வேறுபாட்டை பயன்படுத்தக் கூடாது.
இந்த முரண்பாட்டை கருத்தில் கொண்டால் அரசியல் விவாதங்களில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய வேறுபாடு, சர்ந்தர்ப்பவாதக் கூட்டணிக்கும், சுயநல பதவிமோக அரசியலுக்கும் உள்ள வேறுபாட்டைத்தான்! கொள்கைகள் உள்ளவர்கள் சந்தர்ப்பங்களைப் பொறுத்து கூட்டணி வைக்கலாம்! ஏனெனில் கட்சி தொடர்ந்து இயங்கினால்தான் கொள்கைப் பாதையில் பயணிக்க முடியும்.
ஆனால் பதவி மோகம் மட்டும் கொண்டவர்களுக்கு கொள்கையும் கிடையாது, சந்தர்ப்பமும் கிடையாது. சுயநல அரசியல் மட்டுமே உண்டு. அவர்கள் சுயநல அரசியலை நியாயப்படுத்த கொள்கை வேறு, கூட்டணி வேறு என்பார்கள். ஆனால் கொள்கை என்றால் என்னவென்றே தெரியாத சுயநலமிகளாக இருப்பார்கள். இன்றைய தமிழ்நாட்டு அரசியலைப் புரிந்துகொள்ள இந்த வேறுபாடு மிகவும் முக்கியம்.
அந்த வேறுபாட்டை புரிந்துகொள்ள முதலில் இன்றைய தமிழ்நாட்டு அரசியல் களத்தில் கொள்கை என்பதன் முக்கியத்துவத்தை நாம் முழுமையாக உள்வாங்க வேண்டும். பின்னர் கூட்டணிக்கான இணைப்புப் புள்ளிகள் என்ன, சந்தர்ப்பம் என்ன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அதன் பின்னர்தான் நாம் சுயநல, பதவிமோக அரசியலைத் தெளிவாக அடையாளப்படுத்த முடியும்!

தீவிரமடையும் கொள்கை முரண்பாடுகள்
உலக அரசியல் வரலாற்றை, இந்திய அரசியல் வரலாற்றைப் படிப்பவர்களுக்கு இரண்டு துருவ முனைகள் கொள்கை சார்ந்து உருவாவது தெரியும். ஒன்று முதலீட்டியக் குவிப்பு, சுதந்திர சந்தைப் பொருளாதார ஆதரவு அரசியல். மற்றொன்று, சோசலிச, அரசு பங்கேற்புப் பொருளாதார ஆதரவு அரசியல்.
முதல் வகைமைக்கு அமெரிக்காவும், இரண்டாவது வகைமைக்கு சோவியத் யூனியனும் இருபதாம் நூற்றாண்டில் முன்னுதாரணமாக விளங்கின. பல்வேறு உலக நாடுகளுக்கும் இரண்டு மாதிரிகளுக்குள் எதனை தேர்ந்தெடுப்பது, அல்லது எவ்வகையான கலவையை உருவாக்கிக் கொள்வது என்பது கேள்வியாக இருந்தது.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவே இரண்டு போக்குகளும் நிலவின. பழைய நிலவுடமைச் சக்திகள், புதிய முதலீட்டிய சக்திகள், சோஷலிச முனைப்பு சக்திகள் என மூன்றுமே காங்கிரசில் இயங்கின. நிலவுடமைச் சக்திகளும், புதிய முதலீட்டிய சக்திகளும் உயர்ஜாதி ஆதரவுத் தளங்களாகவும், சோஷலிச முனைப்பு சக்திகள் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆதரவுத் தளங்களாகவும் இயல்பாகவே இருந்தன.
உதாரணமாக பொருளாதார நடவடிக்கைகளில் அரசு தலையிடக் கூடாது என்பவர்கள், “தகுதி/தரம்” ஆகியவற்றின் அடிப்படையிலான குடிமக்களுக்கிடையிலான போட்டியில் அரசு இட ஒதுக்கீட்டை நுழைக்கக் கூடாது என்ற பிழைநோக்கு கொண்டவர்களாக இருப்பது இயல்பானது. அதாவது எளியோர், பாதிக்கப்பட்டவர்கள் ஆதரவாக அரசு தலையிடக் கூடாது, இயங்கக் கூடாது.
அதைப்போலவே, முதலீட்டிய-உயர்ஜாதி சக்திகள் ஒன்றியத்தில் அதிகாரத்தைக் குவிக்க முனைவதும், சோஷலிச-தலித்-பகுஜன் சக்திகள் மாநில அதிகாரத்தை, அதிகாரப் பரவலை சார்ந்திருப்பதும் மற்றொரு இயல்பான கருத்தியல் பிரிவினை ஆகும். ஏனெனில் உயர்ஜாதி-முதலீட்டிய சக்திகள் எண்ணிக்கையில் குறைவாகவும், கல்வியில் முன்னேறியவர்களாகவும், எளிதில் பரவும் வலைப்பின்னலாகவும் இருப்பதும், பிற்படுத்தப்பட்டோர் அதிகம் உள்ளூர் பொருளாதாரம் சார்ந்து இருப்பவர்களாக இருப்பதும் இயல்பானது.
அதே சமயம் நிலவுடமைச் சக்திகளுக்கும்/ முதலீட்டிய சக்திகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருக்கும். சோஷலிச முனைப்புகளிலும் தீவிரப் போக்கு, மிதவாதப் போக்கு, வெவ்வேறு மக்கள் தொகுதிகளைச் சார்ந்த அணிகள் இருக்கும். இந்த கருத்தியல், தொகுதி நலன் சார்ந்த பிரிவினைகள் ஒன்றிய நாடாளுமன்ற தேர்தல், மாநில சட்டமன்ற தேர்தல் இரண்டிற்கும் பொதுவானவை என்பதை நாம் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒன்றிய அரசிடம் அதிக அதிகாரங்கள் குவிந்திருப்பதால் ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகள் மாநில மக்களின் நலன்களை நேரடியாக பாதிக்கக் கூடியவை. மாநில தேர்தல்களிலும் அந்த கொள்கை சார்ந்த முடிவுகள் பிரதிபலிப்பது இயல்பு. அதனால் இந்த கொள்கை வரைபடம் பொதுவானது. வலது சாரி அணி பாஜக தலைமையேற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி, இடதுசாரி அணி காங்கிரஸ் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியா கூட்டணி என்று எடுத்துக்கொண்டு கொள்கை வேறுபாடுகளைக் காண்போம்.

இந்த கொள்கைகள் அனைத்து மக்களையும் பாதிப்பதால் மாநில அரசியலில் பாஜகவை ஆதரிக்கலாம், தேசிய அரசியலில்தான் அது பிரச்சினை என்பது போன்ற நிலைப்பாடுகள் அபத்தமானவை மட்டுமன்றி ஆபத்தானவையும் கூட.
தேசிய அரசியலும், மாநில முரணரசியலும்
தேசிய அரசியலின் கொள்கைகள் எல்லா மக்களையும் பாதித்தாலும், மாநிலங்களில்தான் முரணரசியல் வேர்கொண்டுள்ளது. அரசியல் என்பதை ஆங்கிலத்தில் Politics என்றும், முரணரசியல் என்பதை Political என்றும் குறிக்கிறார்கள். அரசியல் என்பது கொள்கைகள்படி இயங்கும். முரணரசியல் என்பது எதிரி-நண்பன் என்ற வேறுபாட்டில் இயங்கும்.
தேர்தல் களம் என்பது முரணரசியல் இயக்கம். ஆட்சி என்பது அரசியல் வடிவம். தேர்தலில் சமூக முரண்களின் இயக்கத்தை தகவமைத்து வெற்றிபெரும் கட்சிகள் பின்னர் கருத்தியல் வழி நின்று ஆட்சி செய்யும். அதனால் வெகுஜன தேர்தல் அரசியலில் தேர்தல் கால நடைமுறை, அதன் சமூக முரணியக்கம் வேறு, ஆட்சி, கொள்கைகள் வேறு என்பது போல தோற்றம் உருவாகும். அது உண்மயல்ல. அது ஒரு கலவை எனலாம். காரணம் சமூகத்திற்கும், அரசுருவாக்கத்திற்கும் உள்ள சிக்கலான வலைப்பின்னல்தான்.
எதிரி, நண்பன் முரண் சமூகத்திலிருந்து உருவாவது; இதற்கான காரணங்களை விளக்குவது கடினம். அண்ணன், தம்பிக்குள் சண்டை வந்தால் ஒருவர் எதிர்கட்சியில் போய் இணைந்துவிடுவார். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் மகன் ஜெகன்மோகன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவராகவும், மகள் ஷர்மிலா காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் எதிரெதிர் அணியில் போட்டியிட்டார்கள். கடுமையான குற்றச்சாட்டுகள் இருவருக்குமிடையில் வீசப்பட்டன. இந்திரா காந்தியின் பேரன், ராகுல் காந்தியின் சித்தப்பா மகன் வருண் காந்தி பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக 15 ஆண்டுகள் இருந்தார்.

சமூகத்தில் உருவாகும் முரணரசியல் கட்சிகளுக்குள் புகுந்தாலும், கட்சித் தலைமைகள் கொள்கைகளைப் பின்பற்றுவது இயல்பு. அதனால்தான் கட்சியின் தளமட்ட உறுப்பினர்கள், தலைவர்கள் கட்சி மாறினாலும், கட்சித் தலைமையில் ஒரு தொடர்ச்சியும், கொள்கையில் தொடர்ச்சியும் இருக்க வேண்டும். காங்கிரஸிலிருந்து மாதவராவ் சிந்தியா பாஜக-விற்குப் போகலாம். சங்கர் சிங் வாகேலா பாஜகவிலிருந்து காங்கிரஸிற்கு வரலாம். ஆனால் பாஜகவும், காங்கிரஸும் அந்தந்த கட்சிகளின் கொள்கைகளில் தொடரும்.
தமிழ்நாட்டிலும் திராவிட முன்னேற்றக் கழகம் 1971 தேர்தலில் கிட்டத்தட்ட 50% வாக்குகளைப் பெற்ற பிறகு அது இரண்டாகப் பிளந்தது. எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க மாநில அளவில் தி.மு.க-வுடனான முரணரசியலைக் கட்டமைத்தது. இரண்டு கட்சிகளுக்குள் இரண்டாம் கட்ட தலைவர்கள் கட்சி மாறுவது இயல்பானதாகவே இருந்தது.

கருத்தியல் அளவில் தி.மு.க பெரியார்-அண்ணா உருவாக்கிய திராவிட-தமிழர் என்ற அடையாளத்தை வலியுறுத்தி மாநில நலன்களைப் பேணியது. அ.இ.அ.தி.மு.க இந்திய அடையாளத்தை அனுமதித்து, அனுசரித்து மாநில நலன்களைப் பேணியது. தி.மு.க தொடர்ந்து இட துசாரி வெகுஜனவியக் கட்சியாக பயணிக்க, அ.இ.அ.தி.மு.க வலதுசாரிச் சாய்வு கொண்டதாக இருந்தது. ஆனால் மாநில கட்சிகளாகவும். திராவிட-தமிழ் மக்கள் தொகுதியின் முரணரசியல் களத்தின் வடிவமாகவும் இவை நாற்பதாண்டுகாலம் பயணித்தன.

சுயநல அரசியலின் தொடக்கம்
ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது வாரிசு யார் என்பது தெளிவாக இல்லாததால் அ.இ.அ.தி.மு.க தலைவர்களிடையே பதவிமோகம், சுயநல அரசியல் தொடங்கியது. முதலமைச்சர் பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக தன் பிடிக்குள் கொண்டுவந்தது. இதை உணர்ந்த சசிகலா தானே முதல்வராக முனைந்தார். பாஜக ஓ.பி.எஸ்-ஸை கலகம் செய்யத் தூண்டியது. சசிகலாவை சிறைக்கனுப்பியது. சசிகலா டி.டி.வி.தினகரன் துணையுடன் ஓ.பி.எஸ் கலகத்தை முறியடித்து, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு சிறை சென்றார்.
டி.டி.வி.தினகரன் சசிகலா சார்பாக முதல்வராக முயற்சியெடுத்தார். பாஜக அதனை விரும்பவில்லை. அவரையும் கைது செய்தது. அப்போது தனக்குக் கிடைத்த பதவியை தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பினை எடப்பாடி பழனிசாமி கண்டார். பாஜக-வுடன் உடன்படிக்கை செய்துகொண்டு ஓ.பி.எஸ்-ஸை இணைத்துக் கொண்டு சசிகலா-தினகரனை வெளியேற்றினார்.
ஓ.பி.எஸ் தான் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பை எதிர்பார்த்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்குத் தயாராக இல்லை. மோதல் முற்றியதில் ஓ.பி.எஸ்-ஸையும் வெளியேற்றினார் பழனிசாமி. ஒருவழியாக சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என நால்வரையும் பிரித்துவிட்ட பாஜக நால்வரையும் தன் பிடிக்குள் கொண்டுவந்து விட்டது எனலாம்.
இப்போது எடப்பாடி பழனிசாமிதான் கட்சி சின்னத்தை வைத்துள்ளார். எதிர்கட்சி தலைவராக உள்ளார். ஆனால் அவர் பாஜக-வின் மக்கள் விரோத செயல்பாடுகள் எதனையும் விமர்சிக்கத் தயாராக இல்லை. திராவிடம் என்ற அடையாளமே அவருக்குப் பொருட்டாக இல்லை. அதைப்பற்றி ஆராய்ச்சியாளர்களிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டார். தான் முதல்வராக வேண்டும் என்பதைத் தவிர வேறு கொள்கையோ, கோட்பாடோ அவருக்கு இல்லை.
தி.மு.க எதிர்ப்பியம் என்ற திராவிட-தமிழர் விரோதக் கோட்பாடு
இப்போது உருவாகியுள்ள அரசியல் சந்தர்ப்பம் எது என்பதுதான் கேள்வி. பாரதீய ஜனதா கட்சி ஒன்றியத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. இந்தியக் குடியரசு விழுமியங்களையெல்லாம் மெல்ல மெல்ல சிதைத்து வருகிறது. ஒன்றிய அரசை ஒற்றை அரசாக மாற்றத் துடிக்கிறது.
இந்தியாவிலேயே மாநில முரணரசியல் களத்தை முழுமையாகக் கட்டமைத்தது தமிழ்நாடு மட்டும்தான். திராவிட தமிழர் என்ற சுயாட்சி அடையாளம்தான் இந்த மாநிலத்தின் அரசியல் அடிப்படை என்று அறுபதாண்டுகாலமாக உறுதிப்பட்டு விட்டது. காலிஸ்தான் என்ற தனிநாடு கோரி பெரும் போராட்டமெல்லாம் நடந்த பஞ்சாபில் கூட காங்கிரஸ் கட்சி பலமுறை ஆட்சியமைத்துவிட்டது. இப்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்து வந்துள்ளன.
இந்த நிலையை தகர்ப்பது பாஜக-வின் ஒரே நாடு, ஒரே அரசு என்ற அதிகாரக் குவிப்பிற்கு முற்றிலும் அவசியமானது. அதனால் அது முழு வீச்சில் தமிழ்நாட்டில் கால் பதிக்க விரும்புகிறது. தனது மதவாத அரசியலை, பாசிச நோக்கங்களை கடுமையாகப் பிரசாரம் செய்யத் துவங்கியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் இல்லாத பிரச்சினையை உருவாக்கி அதனை தமிழ்நாட்டின் அயோத்தியாக்குவோம் என முழங்குகிறது.
ஆனால் தமிழ்நாட்டு எதிர்கட்சிகள் தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியை அகற்றுவது மட்டும்தான் இன்றைய அரசியல் சந்தர்ப்பம் என்று கூறுகின்றன. பாஜக-வை எதிர்ப்பது முக்கியமல்ல என்கின்றனர். “பாஜக எதிர்ப்பில் ஒன்றுபடுவோம்; மாநிலத்தை யார் ஆள்வது என்பதில் போட்டியிடுவோம்!” என்று அவர்கள் கூறுவதில்லை. தி.மு.க எதிர்ப்பியம் (anti DMK-ism) என்ற போலிக் கோட்பாட்டை உருவாக்குகின்றன. அதற்கான தேவை என்ன என்பதை அவற்றால் விளக்க முடியவில்லை.
காரணம் தி.மு.க தனிக்கட்சியாக ஆட்சி செய்தாலும், கூட்டணி கட்சிகளை, ஏன் எதிர்கட்சிகளைக் கூட அரவணைத்துதான் செல்கிறது. அவர்கள் கோரிக்கைகளை பரிசீலிக்கிறது. பிற கட்சிகளை ஒடுக்குவதில்லை; ஒழிக்க நினைப்பதில்லை. ஒன்றிய பாஜக அரசின் அதிகாரக் குவிப்பிற்கு எதிராக ஓரணியில் தமிழ்நாட்டைத் திரட்டி மாநில அதிகாரங்களை காப்பாற்ற முனைந்துள்ளது. ஒன்றிய அரசிற்கும், மாநில அரசிற்குமான அதிகாரப் பகிர்வு முரண் இன்று ஆரிய-திராவிட பண்பாட்டுப் போரின் தொடர்ச்சியாக கூர்மையடைவதைக் கவனிக்கிறது.
உண்மையில் இந்த முரண்பாட்டை கூர்மைப்படுத்தியது பாஜக-தான். கவர்னர் ஆர்.என்.ரவி மூலமாக திராவிட பண்பாட்டு அடையாளத்தின் மீது கடும் தாக்குதலைத் தொடங்கியது. அண்ணாமலை என்ற திடீர் மாநில தலைவரை உருவாக்கி தி.மு.க மீதான வெறுப்பரசியலைக் கூர்மைப்படுத்தியது. நாம் தமிழர் கட்சி சீமானை வைத்து எப்படியாவது திராவிட பண்பாட்டு அடையாளத்தையும், தமிழ் மொழி அடையாளத்தையும் பிரித்துவிட வேண்டும் என்று பெருமுயற்சி செய்கிறது. காசி தமிழ்ச் சங்கம் நடத்துகிறது.
தமிழ் மொழியில் ஊடுறுவியுள்ள பார்ப்பனீயத்தை நீக்கத்தான் திராவிட இயக்கம் திராவிட பண்பாட்டு அடையாளத்தை வலியுறுத்தியது. அதனால் எப்படியாவது திராவிடம் என்பதைத் தமிழிலிருந்து பிரித்துவிட்டால் ஆரிய இந்திய பண்பாட்டு தேசியத்தை கருத்தியல் மேலாதிக்கமாக்கி, பின்னர் மெல்ல இந்தி மொழியையும் புகுத்திவிடலாம் என்று கருதுகிறது.
அரசியல் சிந்தனையாளர்கள் கூறுவதுபடி ஒற்றை தேசிய அரசா, கூட்டாட்சிக் குடியரசா என்பதைத் தீர்மானிப்பதே இன்றைய இந்திய அரசியல் சந்தர்ப்பம். அந்த சந்தர்ப்பத்தில் நடப்பதுதான் 2026 தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல். அந்த தேர்தலின் கொள்கைக் கூட்டணியும் தி.மு.க தலைமையேற்கும் இந்தியா கூட்டணிதான்; சந்தர்ப்பவாத கூட்டணியும் அதுதான்.
தமிழ்நாட்டு முதலமைச்சர் கனவு காணும் பிறர் செய்யும் தி.மு.க எதிர்ப்பிய அரசியல் என்பது சுய நல பதவி மோக அரசியல்தான். அவர்கள் பாஜக-வுடன் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி வைப்பது என்பது இந்த வரலாற்று சந்தர்ப்பத்திற்குச் செய்யும் சுயநல பதவிமோக துரோகம்தான் என்பதில் ஐயமில்லை.
முற்போக்கு அரசியல் தத்துவம் அறிந்தவர்கள் முதல்வர் ஸ்டாலினுடன் ஓரணியில் இணைந்து, தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்றுதான் கூறுவார்கள்.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள:rajankurai@gmail.com
