முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அமைச்சர் சேகர்பாபு சந்தித்து பேசியுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அம்மாவின் தொண்டர்களை ஒன்றிணைப்பேன் என்று கூறி, அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை தொடங்கினார்.
ஆனால் ஓபிஎஸ் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்தநிலையில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இதையொட்டி என்.டி.ஏ கூட்டணியில் இணைவதற்கு ஆர்வம் காட்டினார். ஆனால் என்.டி.ஏவில் ஓபிஎஸை சேர்த்துக்கொள்ள ஈபிஎஸ் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இந்தசூழலில் ஓபிஎஸுடன் இருந்தவர்கள் பலரும் அவரிடமிருந்து விலகி திமுக, தவெக ஆகிய கட்சிகளில் இணைய தொடங்கினர்.
ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ் அணியின் மிக முக்கிய நிர்வாகியாக இருந்த வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். ஜேசிடி பிரபாகர் விஜய்யின் தவெகவில் இணைந்தார்.
இவர்களை தவிர ஓபிஎஸ் அணியில் இருந்த எஸ்.எஸ்.கதிரவன், வி. பிரபு, அ.சுப்புரத்தினம் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
இந்தசூழலில் நேற்று (ஜனவரி 23) பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டத்திலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு இல்லை.
இந்நிலையில் இன்று சட்டமன்ற மன்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்ட ஓபிஎஸை, கூட்டம் முடிந்ததும் அமைச்சர் சேகர்பாபு சந்தித்து பேசியிருக்கிறார். சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்ததாக தகவல்கள் வருகின்றன.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்திருக்கும் நிலையில் அமைச்சர் சேகர்பாபு ஓபிஎஸை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பாஜக தலைவர் அண்ணாமலை, என்.டி.ஏ கூட்டணியில் இணைவது தொடர்பாக ஓபிஎஸ் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புவதாக சூசகமாக பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
