அப்பாவையே ஒழுங்காக வைத்துக் கொள்ளத் தெரியவில்லை – அன்புமணியை சாடிய அமைச்சர் சேகர்பாபு

Published On:

| By Pandeeswari Gurusamy

அன்புமணியால் அப்பாவையே ஒழுங்காக வைத்துக் கொள்ளத் தெரியவில்லை. ராமதாஸ் கதறுகிறார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

பாமக சார்பில் நேற்று சென்னையில் நடைபெற்ற இளைஞர் அணி பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், “திமுகவை ஆட்சியை விட்டு விரட்டி அடிக்க வேண்டும். இனி தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடைபெறக் கூடாது. ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களுக்கும் துரோகம் செய்திருக்கிறார். அதனால் ஒவ்வொரு பக்கமும் ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார். மேலும், திமுக 10 இடங்களுக்குள் தான் வெற்றி பெறும் என்றும் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், சென்னையில் இன்று (பிப்ரவரி 11) காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “திமுக சென்னையில் உள்ள 22 தொகுதிகளிலும் வெற்றி பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அப்போது, அன்புமணி ராமதாஸ் “திமுக கூட்டணி வலுவான கூட்டணி இல்லை” என்று பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “உடைந்த கட்சியின் ஒரு பாகமாக இருக்கும் அன்புமணி பேசுவதற்கெல்லாம் பதில் சொன்னால் சரியாக இருக்காது” என்றார்.

ADVERTISEMENT

பாமகவின் பிரிவிற்கு காரணம் திமுக தான் என்று அன்புமணி ராமதாஸ் கூறியது குறித்த கேள்விக்கு, “அப்பாவையே ஒழுங்காக வைத்துக் கொள்ளத் தெரியவில்லை. அவர் ஒரு கட்சி வேறு வைத்துக் கொண்டிருக்கிறார். ராமதாஸ் கதறுகிறார். பாவம், அவரைப் பார்த்தாலே பாவமாக இருக்கிறது” என்று சேகர்பாபு பதிலளித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share