சீமானுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில், இரு தரப்பும் மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் பழகி, பாலியல் பலாத்காரம் செய்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 2011ஆம் ஆண்டு விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் 2012ஆம் ஆண்டு அந்த புகாரை வாபஸ் பெற்றார்.
இந்தநிலையில் 2023ஆம் ஆண்டு சீமான் மீது மீண்டும் போலீசில் புகார் அளித்தார். தன்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து, கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம் சீமான் மீதான புகாரை விசாரித்து 12 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதை 2025 மார்ச் 3ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் சீமானை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது. அதேசமயம் விசாரணையை தொடரவும் உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பினரும் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதோடு சீமான் விஜயலட்சுமியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. மன்னிப்பு கேட்க தவறினால் இடைக்கால நிவாரணத்தை நீக்கி அவருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அதன்படி இந்த வழக்கு மீண்டும் இன்று (செப்டம்பர் 24) விசாரணைக்கு வந்தது.
அப்போது விஜயலட்சுமி சார்பில், சீமான் மன்னிப்பு கேட்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு சீமான் தரப்பில், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளோம் என்று வாதிடப்பட்டது.
இந்நிலையில் நீதிபதிகள், ‘நீங்கள் குழந்தைகள் அல்ல. இந்த விவகாரத்தை எவ்வளவு காலம் தான் இழுத்துக் கொண்டே இருப்பீர்கள். இருவரும் அரசியல்வாதிகள்… பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்’ என்று எச்சரித்தனர்
அப்போது விஜயலட்சுமி தரப்பில், ‘அவர் ஒரு நடிகை என்றும்… அரசியல்வாதியான சீமானால் பல ஆண்டுகளாக துன்புறுத்தப்பட்டார்.
சீமான் மன்னிப்பு கேட்க ஒத்துக்கொண்டாலும் அதை மனப்பூர்வமாக செய்யவில்லை. அவரது பிரமாணப் பத்திரத்தை படித்து பார்த்தாலே அவரது வன்மம் தெரியவரும். தற்போது விஜயலட்சுமி பற்றி வெளியில் தவறாக தான் பேசி வருகிறார்’ என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அப்போது சீமான் தரப்பில் எங்களுக்கு இந்த பிரச்சனை தீர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இரு தரப்பும் அனைத்து புகார்களையும் திரும்ப பெற்று, மன்னிப்பு கேட்டதை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கு குறித்து ஊடகங்களில் இருவரும் பேசக்கூடாது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சீமானின் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும் விஜயலட்சுமி குறித்து கருத்து கூறக்கூடாது’ என்று தெரிவித்தனர்.
அப்போது விஜயலட்சுமி சார்பில், ‘தன்னை பாலியல் வன்கொடுமை செய்தது சீமான் தான். அவரிடம் மன்னிப்பு கேட்க முடியாது’ என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ‘இந்த விவகாரத்தை முடித்து வைக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.. உங்களுக்கு மன்னிப்பு கேட்க விருப்பம் இலலை என்றால் நீங்களும் சீமானிடம் இருந்து மன்னிப்பை எதிர்பார்க்காதீர்கள் ‘ என கண்டிப்புடன் தெரிவித்தனர்.
இந்த சூழலில் சீமான் சார்பில், ‘ 2012 ஆம் ஆண்டு சீமானுக்கு எதிரான புகாரை திரும்பப்பெற்ற விஜயலட்சுமி பெங்களூருக்கு சென்று விட்டார். 11 ஆண்டுகள் கழித்து 2023 ஆம் ஆண்டு மீண்டும் சென்னை வந்து புகார் தெரிவித்தார் ‘ என தெரிவிக்கப்பட்டது.
அப்போது எதற்காக விஜயலட்சுமி பெங்களூரு சென்றார் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு விஜயலட்சுமி தரப்பில், சீமான் மற்றும் அவரது கட்சிக்காரர்களின் அச்சுறுத்தல் காரணமாக பெங்களூரு சென்று விட்டார். அது மட்டுமல்ல விஜயலட்சுமி சினிமா வாழ்க்கையும் சீரழிந்து விட்டது’ எனக் கூறப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள், இப்போது கூட விஜயலட்சுமி நடிக்கலாமே என்றனர்.
இதற்கு விஜயலட்சுமி சார்பில், பெண்களால் 40 வயதுக்கு மேல் சினிமா துறையில் கோலோச்ச முடியாது என்று கூறிய போது,
அப்படி சொல்லாதீர்கள் இப்போது கூட நீங்கள் அம்மா, பாட்டி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும், இருவரும் ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் இருவரையும் நீதிமன்றத்திற்கு நேரில் வர வைக்க நேரிடும் என்று எச்சரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.