சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். திருச்சியில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாட்டில் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
2016-ம் ஆண்டு முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. 234 தொகுதிகளிலும் போட்டியிட்டாலும் அக்கட்சியின் வேட்பாளர்கள் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. அதேபோல 2017 ஆர்.கே. நகர் இடைத் தேர்தல், 22 தொகுதி இடைத் தேர்தல். 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல் ஆகியவற்றிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. ஆனால் வெற்றி பெறவில்லை.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 8.22% வாக்குகளைப் பெற்றது நாம் தமிழர் கட்சி.
இந்த தேர்தலிலும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்தே 234 தொகுதிகளில் போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி.
பெரும்பாலான தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துவிட்டார். திருச்சியில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் மாநில மாநாட்டில் 234 தொகுதிகளின் வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார்.
அதன்படி காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் சீமான் போட்டியிட இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.
சீமானின் தேர்தல் களம்
2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் சீமான் போட்டியிட்டார். அத்தொகுதியில் 12,497 வாக்குகளை மட்டுமே சீமான் பெற்றார்.
2021-ம் ஆண்டு திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிட்டார். அத்தொகுதியில் 48,597 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.
தற்போது 3-வது முறையாக சீமான் , சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
காரைக்குடி தொகுதி நிலவரம்
காரைக்குடி தொகுதியைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி 5 முறை வென்ற தொகுதி. அதிமுக 4 முறையும் திமுக 3 முறையும் தமாகா, பாஜக தலா ஒரு முறையும் வென்ற தொகுதி காரைக்குடி.
திரைத்துறையைச் சேர்ந்த ராம நாராயணன், திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு 1989-ல் இத்தொகுதியில் வென்றார். 2001 தேர்தலில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச். ராஜா இத்தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார்.
காரைக்குடி தொகுதியில் முக்குலத்தோர் (வல்லம்பர்), முத்தரையர், தலித்துகள், நகரத்தார் (செட்டியார்), யாதவர், பிள்ளைமார், இஸ்லாமியர், உடையார், கிறிஸ்தவர்கள் கணிசமான வாக்காளர்கள்.
2021-ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இத்தொகுதியில் போட்டியிட்டது. அக்கட்சியின் மாங்குடி, 75,954 வாக்குகளைப் பெற்றார்; பாஜகவின் எச்.ராஜா 54,365; அமமுகவின் தேர்போகி பாண்டி 44,864 வாக்குகளையும் பெற்றனர்.
நாம் தமிழர் கட்சியின் துரை மாணிக்கம் 23,872 வாக்குகளைப் பெற்று 4-வது இடத்தைப் பெற்றார். 2016-ம் ஆண்டு காரைக்குடியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் பரிமளம், 5,344 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
இம்முறை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களம் காண்பதால் காரைக்குடி தொகுதி நட்சத்திர தொகுதியாகிறது.
