கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவில் பேசிய இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற பெயரில் 2025-26 கல்வி ஆண்டிற்கான புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட 7 திட்டங்களின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (செப்டம்பர் 25) நடைபெற்றது.
அந்த விழாவில் லப்பர் பந்து பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கலந்துகொண்டு, மேடையில், தான் கல்விகற்ற சூழலையும், தற்போது கல்விக்காக தமிழக அரசு முன்னெடுத்து வரும் திட்டங்களையும் பாராட்டி பேசினார்.
எல்லோரும் படித்து ஜெயித்தவர்கள் தான்!
அதோடு அவர், “சிலர் சச்சின் படிச்சிருக்காரா? இளையராஜா படிச்சிருக்காரா? ஏ.ஆர்.ரகுமான் படிச்சிருக்காரா என நெறைய பேர் சொல்வாங்க. நம்பிறாதீங்க. ஆனால் உண்மையில் அப்படி ஜெயித்தவர்கள் 100 பேர் தான். ஆனால் படித்து ஜெயித்தவர்கள் தான் இங்கே அவ்வளவு பேரும். விதிவிலக்குகள் ஒருபோதும் எடுத்துக்காட்டாக இருக்கக் கூடாது” என பேசினார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு கல்லூரி ஆண்டு விழாவில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “சச்சின் டெண்டுல்கர் படிச்சாரா? அவரை விட உலக புகழ்பெற்ற வீரர் உண்டா? அவரே 10ஆம் வகுப்பு தேர்வெழுத பயந்து நான் போகவில்லை” என பேசியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று அரசு நடத்திய கல்வி விழா மேடையில் சீமானை மறைமுகமாக விமர்சித்து தான் தமிழரசன் பச்சமுத்து பேசினார் என சமூகவலைதளங்களில் வீடியோ வைரலானது.
அந்த மேடையில் பேச நீ யாரு?
இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ”ஒரு படத்த எடுத்துட்டா பெரிய கல்வி அறிஞர்னு நெனச்சிட்டு வந்து கருத்து சொல்லிடுற… நான் என்ன சொல்றேன்னு உனக்கு புரியல. அந்த மேடையில் பேச நீ யாரு? நீ ஒரு படத்தை இயக்கியிருக்க.. ஒரு இயக்குனர் அவ்வளவு தான். அதுக்கு என்ன காரணம் நீ படிச்ச கல்வியா?
தனித்திறன் ஆற்றலை வளர்த்துக்கனும்னு சொன்னேன். என்னோட முழுப்பேச்சை கேக்குறதில்ல. ஏதோ சொல்லி கைத்தட்டு வாங்கிறனும். சரி முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாங்கிய கல்வித் தகுதி என்ன?” என சீமான் ஆவேசமாக விமர்சித்தார்.