அண்ணா, எம்.ஜி.ஆரை அநாகரிகமாக விமர்சித்த சீமானுக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (செப்டம்பர் 27) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் குறித்து விமர்சித்து பேசினார்.
அப்போது, ”விஜய் திமுகவிடமிருந்து அண்ணா அதிமுகவிலிருந்து எம்ஜிஆரை எடுத்து வைத்திருக்கிறார். இதில் ஒரு மாற்றமும் இல்லை. இது ஒரு சனியன். அது ஒரு சனியன்” என கூறி இருந்தார்.
இதை அடுத்து சீமானின் பேச்சுக்கு பல்வேறுக் கட்சித் தலைவர்களும் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “தமிழின் உயர்வைத் தன் சொல்லாற்றலால் உயர்த்திக் காட்டியதோடு, தன்னுடைய நாவன்மையினால், பேச்சாற்றலால், முற்போக்குத் திட்டங்களை மக்கள் முன்வைத்து தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா.
“உன் முகத்தைக் காட்டினால் முப்பது இலட்சம் வாக்குகள் நிச்சயம்” என்று பேரறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அதாவது, தமிழ்நாட்டில் திராவிடக் கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பெருமைக்குரியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தோற்றுவித்து தொடர்ந்து மூன்று முறை, பத்து ஆண்டு காலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வலம் வந்து, பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த பெருமைக்குரியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
இப்படிப்பட்ட மாபெரும் தலைவர்களின் புகைப்படங்களைத் தாங்கிக் கொண்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சனிக்கிழமைதோறும் பிரச்சாரம் செய்வதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கொச்சைப்படுத்தி பேசுவது, நாகூசும் வார்த்தைகளால் வசைபாடுவது கடும் கண்டனத்திற்குரியது.
சீமான்குறிப்பிட்ட அந்த வார்த்தைகளை இங்கு குறிப்பிடுவதே நாகரிமற்ற செயல் என்று நான் கருதுகிறேன். இருபெரும் தலைவர்களை இழித்துப் பேசியதற்கு சீமான் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.