மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் மூத்த மகனும், முதலமைச்சர் ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து நேற்று காலமானார். seeman met mkstalin to convey his condolences
இதனையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் இன்று (ஜூலை 20) மாலை அவரை நேரில் சந்தித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆறுதல் தெரிவித்தார்.
எப்படி இருந்தாலும் இழப்பு என்பது பெருந்துயரம்!
அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “அய்யா மு.க.முத்து மறைவு செய்தி அறிந்ததும், நேற்று உடனடியாக இரங்கல் அறிக்கை வெளியிட்டேன். நேற்று நான் வருவதற்குள் அடக்கம் செய்துவிட்டார்கள். அதன்காரணமாக இன்று முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து எனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டேன்.
எப்படி இருந்தாலும் ஒரு இழப்பு என்பது பெருந்துயரம். இந்த நேரத்தில் அவர்களோடு இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அரசியல், கொள்கை இதையெல்லாம் தாண்டி உறவு என்ற ஒன்று உள்ளது. அழகிரியை அண்ணன் என்று தான் அழைப்பேன்.
இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மனித மாண்பு!
நான் ஒருமுறை நீண்ட நேரம் வெயிலில் நின்று பசியால் மயக்கமடைந்தபோது எனது உடல்நலம் குறித்து ஸ்டாலின் விசாரித்தார். அதன்பின்னர் என் அப்பா இறந்தபோது போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். அதன்பின்னர் இறுதி நிகழ்வில் அமைச்சர் பெரிய கருப்பன் ஆறுதலாக வந்து பங்கேற்றார்.
இதுதான் அரசியலுக்கு அப்பாற்பட்ட மனித மாண்பு, நாகரிகம். அந்த அடிப்படையில் அவர்கள் வீட்டில் இழப்பில் நான் பங்கேற்றேன். கட்சி முரண்பாடுகளை கடந்து இத்தகைய தருணங்களில் தலைவர்கள் நடந்து கொள்வது இயல்புதான்.
இந்த மண்ணில் சாதிய தீண்டாமையை விட அரசியல் தீண்டாமை உள்ளது. இங்கே அதிமுக மாவட்ட செயலாளர் மகனும், திமுக மாவட்ட செயலாளர் மகளும் திருமணம் செய்ய முடியாது. அது ஒழிக்கப்பட வேண்டும்.
தமிழர் இனத்துக்கு என்று தனிப்பண்பு, பண்பாடு உள்ளது. எனவே அரசியல் வேறு, மனித மாண்பு வேறு” என சீமான் பேசினார்.
கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்!
அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் நீங்கள் ஆதரவு தருவீர்களா என்ற கேள்விக்கு,
அவர், “இன்னும் 10 மாதங்கள் உள்ளது, கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். ராணுவத்திற்கு என ரகசியம் உள்ளதை போல எல்லாவற்றிற்கும் ஒரு ரகசியம் உள்ளது.
ஒருவேளை அதிமுக தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால் அதிகாரத்தில் பங்கு கொடுக்க முடியாது. ஆனால் கூட்டணி ஆதரவுடன் தான் ஆட்சி அமைக்க முடியும் என்றால் கூட்டணியில் பங்கு தான் கேட்பார்கள்” என்றார்.