தொகுதிகள் ஒதுக்கீடு : திமுக – அதிமுக இடையே மறைமுக ஒப்பந்தம் – சீமான் விமர்சனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

seeman

அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் இது திமுக – அதிமுக இடையேயான மறைமுக ஒப்பந்தம் என சீமான் விமர்சித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் வாக்கு சேகரித்து வருகிறார்.இந்த நிலையில் இன்று (மார்ச் 26) சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையம் அருகே ஓமலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சிவசக்தி, எடப்பாடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பிரியதர்ஷினி, மேட்டூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் வித்தியா வீரப்பன் மற்றும் சங்ககிரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நித்யா ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

ADVERTISEMENT

அப்போது, தமிழ்நாட்டில் அரசியல் வாதிகள் தொழிலதிபர்கள் முதலீடு செய்வது போல் முதலீடு செய்து வாக்குகளைப் பெறுகின்றனர் என்று காட்டமாக விமர்சித்தார். மேலும் திமுக மற்றும் பாஜக அரசுகளை விமர்சனம் செய்து பேசிய நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வருவதாகப் பேசினார்.

இதைத் தொடர்ந்து சேலத்தில் இன்று (மார்ச் 26) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுக – பாஜக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “திமுக அமைச்சர்கள் எங்கெல்லாம் போட்டியிடுகிறார்களோ, அங்கெல்லாம் கூட்டணிக் கட்சியான பாஜகவிற்குத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக உள்ளே வரக்கூடாது என்று சொல்லியே திமுக வெற்றி பெற வாய்ப்பு அமையும். இது அதிமுக மற்றும் திமுக இடையிலான ஒரு மறைமுகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையே காட்டுகிறது” என்று அவர் விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT

முன்னதாக, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் நேற்று பாஜகவிற்கு மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவிநாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை, ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி) ஆகிய 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share