நடிகை விஜயலட்சுமி வழக்கில் நேற்று (பிப்ரவரி 28) இரவு ஆஜரான சீமானிடம் 1.15 மணி நேரம் போலீசார் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளனர். seeman Confession in vijayalakshmi case
சீமான் மீது விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை 12 வாரங்களுக்குள் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 27ஆம் தேதி ஆஜராகுமாறு சீமானுக்கு போலீசார் சம்மன் வழங்கினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் அவரது வீட்டு காவலாளி மற்றும் டிரைவர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது கிருஷ்ணகிரியில் இருந்த சீமான், இதுகுறித்து கேள்விபட்டு செய்தியாளர்களிடம், “இன்னும் நான்கு வாரத்துக்கு எனக்கு நிகழ்ச்சி முன்னமே திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையால் இப்போது ஆஜராக முடியாது. என்ன முடியுமோ செய்யட்டும். நீதிமன்றம் தான் விசாரணைக்கு 12 வாரம் கொடுத்திருக்கிறதே, பிறகு ஏன் அவசரப்படுகிறார்கள்?” என கேள்வி எழுப்பினார்.
ஆனால் நேற்று தருமபுரியில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, பின்னர் அங்கிருந்து சேலம் புறப்பட்ட சீமான், விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தடைந்தார். அப்போது அவர், இரவு 8 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்ற சீமான், 9.15 மணியளவில் காவல் நிலையம் நோக்கி புறப்பட்டார். வளசரவாக்கம் அருகே வந்தபோது அவரது காரை தொண்டர்கள் சூழ்ந்துகொண்டனர்.
இதனால் ஆமை வேகத்தில் கார் நகர, இரவு 10 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் இரவு 11.15 மணிவரை சுமார் 1.15 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
துணை ஆணையர் அதிவீரபாண்டியன் மேற்பார்வையில் உதவி ஆணையர் செம்பேடு பாபு, இன்ஸ்பெக்டர் அன்புக்கரசு ஆகியோர் சீமானிடம் விசாரணை மேற்கொண்டார்.
முதலில் அவரிடம், அவரது பெயர், ஊர், திருமணம், மனைவி, பிள்ளைகள், வேலை, அரசியல் உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பி தகவல்கள் கேட்டு பெறப்பட்டது.
தொடர்ந்து அவரிடம் நடந்த விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
உத்தரவாதம் கொடுக்கவில்லை! seeman Confession in vijayalakshmi case
விஜயலட்சுமியுடன் திருமணம் குறித்த கேள்விக்கு, “விஜயலட்சுமியிடம் பழகியது உண்மை தான். ஆனால் திருமணம் செய்து கொள்வதாக நான் எந்தவிதமான உத்தரவாதமும் கொடுக்கவில்லை. கோயிலில் கல்யாணம் பண்ணவில்லை. நான் கயல்விழியை ஊர் அறிய பத்திரிகைகளில் முழு பக்க விளம்பரம் கொடுத்து, டிவியில் ஒளிபரப்பு செய்து, அழைப்பிதழ் அச்சடித்து திருமணம் செய்துகொண்டேன்.
ஒருசில அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் தான் எனக்கு எதிராக விஜயலட்சுமியை இயக்கி வருகிறார்கள். மற்றபடி நான் திருமணம் செய்யவில்லை” என்று தெரிவித்தார்.
நான் எப்படி ஆஜராகாமல் போவேன்?
சம்மன் ஒட்டியதில் ஏன் பிரச்சனை? என்ற கேள்விக்கு, ”நான் எப்போதுமே போலீஸை மதிக்க கூடிய ஆள். அடுத்தடுத்த அரசியல் பயணத்தால் ஆஜராக முடியவில்லை. நான் எப்படி ஏமாத்தி ஆஜராகாமல் போவேன்?
நீங்கள் (வளசரவாக்கம் போலீஸ்) நோட்டீஸ் ஒட்டிவிட்டு போய்விட்டீர்கள். நீலாங்கரை இன்ஸ்பெக்டர் ஏன் என் வீட்டுக்கு வர வேண்டும். அவருக்கு என்ன உள்நோக்கம்” என்று கேள்வி எழுப்பினார்.
மீண்டும் விஜயலட்சுமி உடனான போட்டோ, வீடியோ குறித்து கேட்டதற்கு, ”நான் விஜயலட்சுமியுடன் பேசியது பழகியது உண்மை. ஆனால் நான் அவரை திருமணம் செய்யவில்லை” என சீமான் தெரிவித்தார்.
எப்போது அழைத்தாலும் வருவேன்! seeman Confession in vijayalakshmi case
அதையும் தாண்டி அவர் விசாரணைக்கு கொடுத்த ஒத்துழைப்பை கண்டு போலீசாரே ஆச்சரியப்பட்டனர்.
இதற்கிடையே ”விசாரணைக்கு தான் நீதிமன்றம் 12 வாரம் கொடுத்திருக்கிறதே.. பிறகு ஏன் அவசரப்படுகிறார்கள்? இதுபோன்று எந்த வழக்கை போலீஸ் விசாரித்தது? என நேற்று காலையில் தருமபுரியில் பேசிய சீமான்,
அதற்கு அப்படியே பல்டியடிக்கும் விதமாக விசாரணையின் போது, “இந்த வழக்க விசாரிக்க நீதிமன்றம் 12 வாரம் தான் கொடுத்துருக்கு. அதனால் தான் நீங்கள் அவசரபடுகிறீர்கள் என்றும் தெரியும், உங்களது கஷ்டமும் எனக்குப் புரிகிறது. இந்த வழக்கில் உங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பை நான் கொடுப்பேன். நான் ஏற்கனவே இதே காவல்நிலையத்திற்கு நீங்கள் அழைத்த போதெல்லாம் வந்திருக்கிறேன். ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறேன் ” எனத் தெரிவித்துள்ளார்.
சுமார் 1.15 மணி நேரம் நடந்த இந்த விசாரணை முடிந்ததும், இறுதியாக ஒப்புதல் வாக்குமூல நகலில் கையெழுத்திடுமாறு சீமானை போலீசார் கேட்டுள்ளனர். அதற்கு அவர் சில நிமிடங்கள் தயங்கியுள்ளார். இதை கண்ட விசாரணை அதிகாரி, “நீங்கள் தான் கேள்விக்கு பதில் அளித்தீர்கள். அது வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் பேசியது தான் வாக்குமூலத்திலும் உள்ளது… கையெழுத்திடுங்கள்” என தெரிவித்தார்.
இதனையடுத்து தான், “அடுத்தகட்ட விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வருவேன்” என்று அவரே எழுதி தனது வாக்குமூல நகலில் கையெழுத்து போட்டுவிட்டு திரும்பியுள்ளார்.
அப்போது அங்கிருந்த பெண் போலீசார் சற்று கோபமாகவே இருந்தனர். அவர்கள் விசாரணை அதிகாரிகளிடம் ”சார் விட்றாதீங்க.. பொம்பளைங்க என்றால் இந்த ஆளுக்கு இளக்காரமா? துருவி துருவி கேள்வி கேளுங்க சார்” என தெரிவித்தனர். அவர்களும் “நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என தெரிவித்து சென்றனர்.