டிஐஜி வருண் குமாருக்கு எதிராக பேச சீமானுக்கு விதித்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், டிஐஜி வருண்குமாருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, இருவரும் மாறி மாறி விமர்சித்து வந்தனர்.
இந்தநிலையில் திருச்சி கீழமை நீதிமன்றத்தில் சீமானுக்கு எதிராக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
அதேபோன்று நஷ்ட ஈடு கேட்டு சீமானுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘ஆதாரமே இல்லாமல் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சீமான் பேசி வருகிறார். எனவே எனக்கு எதிராக ஆதாரமில்லாத கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்க வேண்டும். நஷ்ட ஈடாக 2 கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம் டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு தடை விதித்தது.
இந்த மனு இன்று (செப்டம்பர் 22) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சீமான் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படாததால், வழக்கை அக்டோபர் மாதம் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம் தடையை நீட்டித்து உத்தரவிட்டது.