இந்த நாட்டில் உங்கள் ஈவெரா என்ன செய்தார் – சீமான் கேள்வி

Published On:

| By Pandeeswari Gurusamy

seeman

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே, “இந்த நாட்டில் உங்கள் ஈவெரா என்ன செய்தார்?” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

வேலூர் மாவட்டம், வேலூர் மண்டி வீதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சோனியாவை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆண்டது. போதும், மாற்றத்தைத் தாருங்கள். பாஜகவும் காங்கிரஸும் ஒரே கொள்கைதான்” என்று பேசினார்.

ADVERTISEMENT

பின்னர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தவாக தலைவர் வேல்முருகன் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது குறித்த கேள்விக்கு, “இதற்கு நான் என்ன பதில் சொல்வது? நாங்கள் ஒரே ரத்தம், ஒரே சொந்தங்கள். இதில் அவர் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார். அதில் நான் கருத்து சொல்லக்கூடாது. இவர்களை அடுத்த முறையும் தேர்வு செய்துவிடாதீர்கள் என்று இப்போது எச்சரிக்கிறாரே, அதற்கு நீங்கள் மகிழ்ச்சிதானே அடைய வேண்டும். ஒரு சீட்டுக்காக சரணடைந்து சகித்துப் போகாமல், அடுத்த முறை இவர்களைத் தேர்வு செய்துவிடாதீர்கள் என்று எச்சரிக்கிறார் அல்லவா? அதற்காகப் பாராட்டுகிறேன்” என்றார்.

எல்லோராலும் கைவிடப்பட்ட ராமதாஸ் சசிகலாவுடன் இணைந்து தேர்தல் களத்தைச் சந்திப்பது குறித்த கேள்விக்கு, “மக்கள் எங்கள் அய்யாவை கைவிடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? நான் எல்லாம் அவருடைய பிள்ளை. அவர் இல்லாமல்தான் எனக்கு இந்த உணர்வு, போராட்டக் குணம் எல்லாம் வந்துள்ளதா? 85 வயதில் தமிழைத் தேடி நடந்த ஒரு தலைவர் தமிழ்நாட்டில் இருக்கிறாரா?

ADVERTISEMENT

சமூக நீதி, சமூக நீதி என்று பேசிக்கொண்டிருக்கிறீர்களே, இன்று அவரைத் தாண்டி வேறு யாராவது பேசுவதற்கு ஆள் இருக்கிறார்களா? நான் இன்று பேசுகிறேன் என்றால் அவர் கற்றுக் கொடுத்ததுதான். இந்த நாட்டில் உங்கள் ஈவெரா என்ன செய்தார்? எங்கள் அய்யா ஆனைமுத்து போட்ட பிச்சை மண்டல் கமிஷனில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு.

இந்த நாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்று பேசிக்கொண்டிருக்கும் ஒரு ஆள் இருக்கிறார் என்றால் அது எங்கள் அய்யாதான். கட்சி என்ன கட்சி? மக்கள் கைவிடுவார்களா? அவருக்கு பிள்ளை இருக்கிறேன் அல்லவா? அவரது கனவை நான் நிறைவேற்றுவேன். அப்பாவால் முடியவில்லை என்றால் மகன் செய்வேன். வேறு எதற்கு நான் அரசியலுக்கு வந்தேன்?

ADVERTISEMENT

என்னை எல்லோரும் கூப்பிட்டார்கள், நான் போகவில்லை என்றால் நான் அவர்களைக் கைவிட்டேன் என்று சொல்வீர்களா? இல்லை அவர்கள் என்னைக் கைவிட்டார்கள் என்று சொல்வீர்களா? இந்த வயதிலும் நாட்டிற்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் அல்லவா? அதைப் பாராட்டி கைதட்ட வேண்டும்” என்றார்.

சீமான் ஆரம்பத்தில் இருந்து தனித்து நிற்பது குறித்த கேள்விக்கு, “வைகோ, திருமாவளவன், ராமதாஸ், விஜயகாந்த் பார்த்துக் கற்றுக்கொண்டேன். கற்றறிவை விட பட்டறிவு மேலானது அல்லவா? 22 நாடுகள் எதிர்த்து சண்டை போடும்போது என் தலைவன் (பிரபாகரன்) எந்த நாட்டிடமும் ராணுவ உதவி கேட்கவில்லை. தனியாக நின்றார். அதைத்தான் இப்போதும் சொல்கிறேன். மொத்த கட்சி கூட்டணியை ஒற்றைக் கட்சியாக மோதி வெல்லும்” என்றார்.

கொரோனா காலத்தை விட கடுமையான சூழ்நிலையை இந்தியா எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசியது குறித்த கேள்விக்கு,
“சூழ்நிலையைத் தரப் போவதே அவர்கள்தானே? அவர்களைத் தேர்தலில் எதிர்கொள்ள நாம் தயாராக இருந்துகொள்ள வேண்டும். நீங்கள் ஏற்றுக்கொண்ட பொருளாதாரக் கொள்கை — தனியார் மைய, தாராளமய, உலகமயக் கொள்கையால் அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுத்தால் எனக்கு எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுகிறது. நான் கூட சைக்கிளில் ஓட்டு கேட்கப் போகலாமா என்று இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share