ADVERTISEMENT

பாதுகாப்பு படை நடவடிக்கைகள் உக்கிரம்: இந்திய மாவோயிஸ்டுகளின் ஆயுதங்கள் ‘மவுனிக்க’ப்படுகிறது? விரைவில் யுத்த நிறுத்தம்?

Published On:

| By Mathi

Maoists Arms

சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போதைய மிக முக்கியமான விவாதம், ‘மாவோயிஸ்டுகளின் யுத்த நிறுத்தம்- ஆயுதங்கள் ஒப்படைப்பு- மாவோயிஸ்டுகள் சரணடைவது- அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது’ என்பதாகவே உள்ளது.

2009-ம் ஆண்டு மே 18-ல் தமிழீழத்தில் ஆயுதங்கள் மவுனிக்கப்பட்ட சூழ்நிலையை நினைவூட்டுகின்றன இந்த சொல்லாடல்கள்.

ADVERTISEMENT

மாவோயிஸ்டுகளின் நோக்கம்

இந்தியாவில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக (1967 முதல்) “ஆயுதம் தாங்கிய போராட்டம் மூலம் ஜனநாயகப் புரட்சியை நடத்தி இந்தியாவில் பொதுவுடைமையை நிலைநாட்டுவதே நோக்கம்” என்பதுதான் நக்சல்பாரி இயக்கம் என்ற இன்றைய மாவோயிஸ்டுகளின் இலக்கு.

ADVERTISEMENT

மாவோயிஸ்டுகள் ‘ஏரியா’ எது?

நக்சல்பாரிகளின் 58 ஆண்டுகால ஆயுதப் போராட்ட வரலாற்றில் அதி உச்சம் தொட்ட காலமும் இருந்தது. இந்தியாவின் மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு “Red corridor ” என்ற அரசு பெயரிட்டிருந்தது.

ADVERTISEMENT

மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு பற்றி சொல்லும் போது, “From Pashupati to Tirupati” என்ற சொற்றொடரை அரசுகள் பயன்படுத்தும். அதாவது நேபாளத்தின் பசுபதிநாதர் கோவிலில் இருந்து இந்தியாவின் தென்கோடி ஆந்திராவின் திருப்பதி வரையில் மாவோயிஸ்டுகள் நீண்டு பரவிக் கிடக்கின்றனர் என்பதைக் குறிக்கக் கூடியது.

“இந்தியாவின் 20 மாநிலங்களில் 180 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் நடவடிக்கை இருக்கிறது” என 2013-ம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமான கேள்வி பதிலுக்கு மத்திய அரசு பதிலளித்திருந்தது. அத்துடன் எந்த 20 மாநிலங்களில் எந்த 180 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருக்கிறது என்ற விரிவான புள்ளி விவரமும் அப்போது தரப்பட்டது.

  • ஆந்திரா
  • அருணாச்சல பிரதேசம்
  • அஸ்ஸாம்
  • சத்தீஸ்கர்
  • கர்நாடகா
  • பஞ்சாப்
  • தமிழ்நாடு
  • திரிபுரா
  • உ.பி.
  • பீகார்
  • டெல்லி
  • குஜராத்
  • ஹரியானா
  • ஜார்க்கண்ட்
  • கேரளா
  • மத்திய பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • ஒடிஷா
  • உத்தரகாண்ட்
  • மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருக்கிறது என்றது மத்திய அரசு.

தமிழ்நாட்டில் கோவை, தருமபுரி, திண்டுக்கல், மதுரை, தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகியவை மத்திய அரசின் ‘Red Corridor’ பட்டியலில் உள்ள மாவட்டங்களாக குறிக்கப்பட்டிருந்தன.

18 மாவட்டங்களில் மட்டும்..

ஆனால் 2025-ல் இன்றைய தேதியில் மாவோயிஸ்டுகள் நடவடிக்கைகள் என்பது ‘நடமாட்டம்’ என்ற அளவில் குறைந்து போயிருக்கிறது. ஒடிஷா- ஆந்திரா- மகாராஷ்டிரா- சத்தீஸ்கர்- ஜார்க்கண்ட் மாநிலங்களின் அடர்வனப் பகுதிகள்தான் இன்றைய மாவோயிஸ்டுகளின் பகுதிகளாக உள்ளன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின் படி இன்றைக்கு மாவோயிஸ்டுகள் ‘நடமாட்டம்’ என்பது வெறும் 18 மாவட்டங்களில் மட்டும்தான் என்ற நிலையே உள்ளது.

மத்திய அரசு சொன்னது என்ன?

2025-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந் தேதி மத்திய அரசு, மாவோயிஸ்டுகளின் ‘கதை முடிகிறது’ என்ற அடிப்படையில் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், மாவோயிஸ்டுகள் செல்வாக்கு உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 2018-ல் 90 ஆக குறைக்கப்பட்டது; 2021-ல் 70 ஆகவும் 2024-ல் 38 ஆகவும் 2025-ல் 18 ஆகவும் குறைக்கப்பட்டுவிட்டது என்றது அந்த அறிக்கை.
அந்த ஆறு மாவட்டங்கள்..

மாவோயிஸ்டுகளால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எண்ணிக்கை வெறும் 6.

சத்தீஸ்கரின் பிஜாப்பூர், கான்கெர், நாராயண்பூர், சுக்மா; ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பும்; மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி ஆகியவைதான் அந்த 6 மாவட்டங்கள்.



25 ஆண்டுகளில் பேரழிவு

கடந்த 25 ஆண்டுகளில் மாவோயிஸ்டுகளில் அரசு நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள் எண்ணிக்கை 4,828. சரணடைந்த மாவோயிஸ்டுகள் எண்ணிக்கை 1,814. 2016-ம் ஆண்டில் மட்டும் 1232 மாவோயிஸ்டுகள் சரணடைந்ததாக சொல்கின்றன புள்ளி விவரங்கள்.

இதில் 2024-ம் ஆண்டில் மட்டும் 235 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை 178 மாவோயிஸ்டுகள் மரணித்துள்ளனர். கடந்த ஆண்டு 332 மாவோயிஸ்டுகள் சரணடைந்தனர்; இந்த ஆண்டு இதுவரை 356 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர்.

மாவோயிஸ்டுகளுக்கு எதிரான 3C பார்முலா

கடந்த 25 ஆண்டுகளாக மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைகள் அதிதீவிரமடைந்தன; 25 ஆண்டுகளாக மாவோயிஸ்டுகளின் அரணாக இருக்கின்ற பழங்குடி மக்களை பொதுநீரோட்டத்தில் ‘பல்வேறு வாக்குறுதிகளின்’ பெயரால் பிரித்து வெற்றி கண்டன அரசு படைகள். மாவோயிஸ்டுகளின் செல்வாக்கான வனப்பகுதிக்குள் எட்டிப்பார்க்காத மின்சாரமும் சாலைவசதியும் குடிநீர் வசதியும் NGO-க்களின் உதவியுடன் ஊடுருவ செய்யப்பட்டன. இந்த NGO-க்கள் மாவோயிஸ்டுகளின் பாலமாக இருந்து அரசின் தூதர்களாக இருந்து மெல்ல மெல்ல பழங்குடிகளை பொதுநீரோட்டத்தில் இழுத்து கொண்டு வந்ததில் முக்கிய பங்களிப்பு செய்தன.

மத்திய- மாநில அரசுகள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையின் நடவடிக்கைளுடன் 3C பார்முலா (3C Formula) ஒன்றையும் நடைமுறைப்படுத்தியது.

Road Connectivity என்ற பெயரில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மாவோயிஸ்டுகளின் பகுதிகளில் 11,474 கி.மீ தொலைவுக்கு சாலைகள் அமைத்து தரப்பட்டுள்ளன.

Mobile Connectivity என்ற பெயரில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் 5,139 செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டன.

Financial Connectivity என்ற பெயரில் 2015-ம் ஆண்டு ஏப்ரல் முதல் மாவோயிஸ்டுகள் செல்வாக்கு அதிகம் உள்ள மாவட்டங்களில் 1,007 வங்கிகளின் கிளைகள், 937 ஏடிஎம்கள், 5,731 புதிய தபால் நிலையங்கள் திறக்கப்பட்டன.


யுத்த நிறுத்தம்- பேச்சுவார்த்தை

மாவோயிஸ்டுகளுக்கு எதிரான ‘இறுதி கட்ட’ நடவடிக்கைகளை கடந்த சில ஆண்டுகளாகவே பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மாவோயிஸ்டுகளுடன் யுத்த நிறுத்தத்தை அறிவித்து பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வர வேண்டும் என்பது காங்கிரஸ் மட்டுமல்ல பல்வேறு ஜனநாயக அமைப்புகளின் கோரிக்கையாக இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் மாவோயிஸ்டுகள் கடந்த சில மாதங்களாக அதிக எண்ணிக்கையில் சரணடைகின்றனர்; மாவோயிஸ்டுகளின் மூத்த தளபதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர் என்கின்றன அரசு தரப்பு செய்திகள்.

சத்தீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் மாவோயிஸ்டு இயக்க பொதுச்செயலாளர் நம்பள்ள கேசவ் ராவ் என்ற பசவராஜூ கொல்லப்பட்ட பின்னர் மாவோயிஸ்டுகள் இயக்கத்தில் இருவித கருத்துகள் வெளிப்பட்டு வருகின்றன.

மாவோயிஸ்டுகளின் செய்தித் தொடர்பாளர் தோழர் அபய் பெயரிலான ஆகஸ்ட் 15, செப்டம்பர் 16 அறிக்கைகளில் யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்கள் மவுனிக்கப்படுகின்றன..

தோழர் அபய் வெளியிட்ட அறிக்கையில், பொதுச்செயலாளர் பசவராஜூ முன்னெடுத்த அமைதிப் பேச்சுவார்த்தைகளை தொடரும் வகையில், சர்வதேச- இந்திய சூழ்நிலைகளை உள்வாங்கிக் கொண்டு ஆயுதங்களை மவுனிக்கச் செய்ய தயாராக இருக்கிறோம்” என அதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் மாவோயிஸ்டுகளில் மூத்த தளபதிகள் இந்த யுத்த நிறுத்த கோரிக்கையை நிராகரிக்கின்றனர். இதனால் மாவோயிஸ்டுகள் இயக்கம் பிளவுபட்டு நிற்கிறது என்கின்றன சில தகவல்கள்.


இறுதி தருணமா?

இந்த தருணத்தில்தான் “தலைக்கு ரூ.40 லட்சம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டுகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான 67 வயது சத்யநாராயணா ரெட்டி என்ற புச்சண்ணா என்ற கோபண்ணா மற்றும் 63 வயது கட்டா ராமச்சந்திர ரெட்டி என்ற விஜய் என்ற விகல்ப் ஆகிய இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்” என சத்தீஸ்கரின் பஸ்தாரின் பிராந்திய ஐஜி பி. சுந்தரராஜ் (தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்) அறிவித்துள்ளார். இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநில அரசியலில் தற்போது, மாவோயிஸ்டுகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தை முக்கிய பேசுபொருளாகி இருக்கிறது. 68 ஆண்டுகளாக இந்தியாவில் செங்கொடியை உயர்த்திப் பிடித்து, லால் சலாம்! இன்குலாப் ஜிந்தாபாத்! என காடுகள் அதிர, மலைகள் மிரள முழங்கிய செஞ்சகாப்தத்தின் யுத குரல்கள் மவுனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையே நிகழ்வுகள் அனைத்தும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share