சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2009 மே 31 ஆம் தேதிக்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.8,370 வழங்கப்பட்ட நிலையில், அதே ஆண்டு ஜூன் 1 ஆம் தேதிக்குப் பிறகு நியமிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,200 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது.
ஒரே கல்வித் தகுதி, ஒரே பணி, ஒரே பொறுப்பு என்றாலும், இந்த ஒரே ஒரு நாள் வித்தியாசத்தால் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 வேறுபாடு ஏற்பட்டது. நாளடைவில், இந்த வேறுபாடு ரூ.15,000 முதல் ரூ.17,000 வரை அதிகரித்துள்ளது.
இதனால் சுமார் 20,000 இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் 2009 மே மாதத்திற்குப் பிறகு நியமிக்கப்பட்ட 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
அதன்படி திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரியும் இன்று (டிசம்பர் 26) சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்கனவே பேருந்தை கொண்டு வந்து நிறுத்தியிருந்த போலீசார் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும் அவர்களை கைது செய்தனர்.
பின்னர் பேருந்தில் ஏற்றி அருகில் இருந்த மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
