மெரினாவில் போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள் – குண்டு கட்டாக கைது செய்த போலீசார்!

Published On:

| By Kavi

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி மெரினா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.

2019 மே 31 தேதியில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கும், ஜூன் 1ஆம் தேதி பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடுகள் உள்ளது.

ADVERTISEMENT

இதனால் சுமார் 20,000 இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இவர்கள், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

முதல் நாள் பள்ளிக்கல்வித்துறை வளாகம் முன்பும், இரண்டாவது நாள் எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பும், மூன்றாவது நாளான நேற்று சென்னை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவாயிலில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 29) நான்காவது நாளாக மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே இடைநிலை ஆசிரியர்கள் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

அவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்த முயற்சித்த போது இடைநிலை ஆசிரியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அரசுக்கு எதிராகவும் போலீசாருக்கு எதிராகவும் ஆசிரியர்கள் கோஷம் எழுப்பினர்.

இந்த சமயத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு ஆசிரியை மயக்கமடைந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்களத்தில் இருந்த ஆசிரியர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

இந்தப் போராட்டம் குறித்து இடைநிலை ஆசிரியர்கள் கூறுகையில், ‘ 16 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறோம். அரையாண்டு விடுமுறையில் குழந்தைகளை விட்டுவிட்டு வந்து போராடுகிறோம். இத்தனை வருடங்களாக அமைதியாக தான் போராடினோம். நடுரோட்டில் அமர்ந்து போராடவில்லையே. எங்களை இங்கு அமர வைத்தது யார்… நீங்கள்தானே… எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில் எங்களது போராட்டம் தொடரும்’ என்று கூறினர்.

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தால் காமராஜர் சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share