சென்னையில் 19ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்துள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களின் போராட்டம் இன்று (ஜனவரி 13) 19வது நாளை எட்டி இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக, இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண் 311- ல் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் தினசரி ஆசிரியர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
அந்த வகையில் இன்று எழும்பூரில் நடந்த போராட்டத்தில், ‘ வஞ்சிக்காதே வஞ்சிக்காதே இடைநிலை ஆசிரியர்களை வஞ்சிக்காதே’ போராட்டம் இது போராட்டம் உரிமை மீட்பு போராட்டம்’ என்று கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, போலீசார் இடைநிலை ஆசிரியர்களை கைது செய்ய வந்தனர். ஆனால், ஆசிரியர்கள் நாங்களே ஒரு 20 நிமிடத்தில் கிளம்பி விடுவோம் எங்களை போராட விடுங்கள் என்று கூறியும் போலீசார் அவர்களை குண்டுகட்டாக கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
அப்போது சில ஆசிரியைகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே போலீசார் கைது செய்தாலும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தினசரி போராட்டம் நடத்துவோம் என்று ஆசிரியர்கள் ஆவேசமாக கூறினர்.
இந்த சூழலில் பொங்கல் பண்டிகை நெருங்குவதால் இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக முதல்வர் உடனடியாக கவனம் செலுத்தி சம வேலைக்கு சம ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றித் தரவும், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளைக் கைவிடவும், தமிழக பள்ளிக் கல்வி ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொண்டுள்ளது.
