அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 31-ந் தேதி நடைபெறுகிறது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது அதிமுக. இந்த கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை; அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்பது அக்கட்சியின் நிலைப்பாடு.
அத்துடன், இந்த கூட்டணியில் இடம் பெறக் கூடிய கட்சிகளை சேர்ப்பது குறித்தும் அதிமுகதான் முடிவெடுக்கும் எனவும் அக்கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் அண்மையில் தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், சென்னைக்கு வந்து எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, அதிமுக- பாஜக கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் சென்னையில் டிசம்பர் 31-ந் தேதி அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பாஜக கூட்டணியில் அதிமுகவுக்கான தொகுதிகள், கூட்டணியில் சேர்க்க வாய்ப்புள்ள கட்சிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படலாம் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
