திமுக – மநீம இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு: சின்னம் குறித்து இழுபறி? நாளை மநீம அவசரக் கூட்டம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

mnm

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இன்று (மார்ச் 19) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவிற்கும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கும் இடையே இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள், மதிமுகவிற்கு 4 இடங்கள்,IUML, கொமதேக, மமக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விசிக, தேமுதிக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை அடுத்து நடைபெற உள்ளது. இன்று மக்கள் நீதி மய்யத்துடனான 2ம் கட்ட பேச்சு வார்த்தை நிறைவுற்றது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் போட்டியிடும் சின்னம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

“திமுக தரப்பில் எங்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், கடந்த 2019 மற்றும் 2021 தேர்தல்களில் எங்களது ‘டார்ச் லைட்’ சின்னம் மக்களிடமும் தொண்டர்களிடமும் ஆழமாகச் சென்று சேர்ந்துள்ளது. எனவே, எங்களது தனித்துவமான சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்பதில் உறுதியாக உள்ளோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

நாளை அவசரக் கூட்டம்

இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்க, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நாளை (20.03.2026) மாலை 5 மணிக்கு சென்னையில் அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மண்டல அமைப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

ADVERTISEMENT

இதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓரிரு நாட்களில் திமுக கூட்டணி குறித்த முழுமையான தொகுதிப் பங்கீடு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share