திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி உடன்பாடு இன்று (மார்ச் 13) கையெழுத்தாகி உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திமுகவும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொமதேக) இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரனும் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கொமதேகவுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த முறை ஒரு தொகுதி குறைக்கப்பட்டு, இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது என்பது ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொமதேக சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவர் என்பதும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஏற்கனவே காங்கிரஸ், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ள நிலையில், தற்போது கொமதேகவுடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.
