பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற திருச்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி விழா மேடையில் தங்களுக்கு இடம் மறுக்கப்பட்டதாக தமிழக பாஜக மூத்த தலைவர்கள் குமுறலில் இருக்கின்றனர்.
திருச்சியில் நேற்று மார்ச் 11-ந் தேதி பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இந்த பொதுக் கூட்ட மேடையில் பாஜக, அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.

மோடி பங்கேற்ற இக்கூட்டத்தின் மேடையில் பாஜகவின் எல். முருகன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, சரத்குமார் ஆகியோர் மட்டும் அமர்ந்திருந்தனர்.
ஆனால் பாஜகவின் மூத்த தலைவர்களான பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட யாருக்குமே மோடியின் மேடையில் அமர வாய்ப்பு தரப்படவில்லை. அவர்கள் கீழே அமர்ந்திருந்தனர்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராகவும் மத்திய இணை அமைச்சராகவும் இருந்தவர் பொன்.ராதாகிருஷ்ணன்; அவரைப் போல தமிழக பாஜக தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ஆளுநராகவும் பதவி வகித்தவர். பாஜகவின் அகில இந்திய மகளிர் அணி தலைவராகவும் எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் வானதி சீனிவாசன். ஆனாலும் மோடி மேடையில் இவர்கள் அமர வாய்ப்பு தரப்படவில்லை.
இது பற்றி பாஜக சீனியர்கள் கூறுகையில், “இந்த புறக்கணிப்புக்கு காரணமே மத்திய அமைச்சர் எல்.முருகன்தான்.. அவர்தான் இந்த சீட் ஏற்பாடுகளை செய்தவர்.. மோடி கலந்து கொண்டது பாஜக கூட்டம் இல்லைதான்.. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம்தான்.. அப்படியானால் ஒவ்வொரு கட்சியின் தலைவர்கள் மட்டும் அமர வைக்கப்பட்டிருக்கலாமே? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் என்பதால் எல். முருகன் ,ஆகியோரை மட்டுமே உட்கார வைத்திருக்கலாமே.. எதற்காக அண்ணாமலையும் சரத்குமாரும் மேடையில் உட்கார வைக்கப்பட்டனர்?
அண்ணாமலையின் பெயரை சொன்னதும் பாஜகவினர் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள் என்பதாலா? சரத்குமார், சினிமா நட்சத்திரம் என்பதாலா?” என அந்த நிகழ்ச்சியிலேயே குமுறிக் கொட்டிவிட்டனர். பாஜக சீனியர்களின் புறக்கணிப்பும் கோபமும் பாஜகவில் பெரும் புயலை வீசிக் கொண்டிருக்கிறது.
