கோவையில் சினிமா பாணியில் பள்ளி வாகனத்தின் டயர் உருண்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை அவிநாசி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட ஜி.டி நாயுடு மேம்பாலம் 10.1 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இன்று (டிசம்பர் 20) அந்த மேம்பாலத்தில் கோவை நல்லாம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் அமிர்தா வித்யாலயா பள்ளி வாகனம் சென்று கொண்டு இருந்தது.
அப்பொழுது திடீரென எதிர்பாராத விதமாக அதில் இருந்த ஒரு சக்கரம் கழன்று தனியாக உருண்டோடியது. இதைத்தொடர்ந்து வாகன ஓட்டுநர் வாகனத்தை சாமர்த்தியமாக கட்டுப்படுத்தி பாலத்தின் ஓரத்தில் நிறுத்தினார். மேலும் வாகனத்தில் பள்ளி மாணவர்கள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
சக்கரம் கழன்ற வேகத்தில் அது பாலத்தின் சரிவில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தனியாக உருண்டு சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஒருவர் அந்த டயரைப் பிடித்தார். பின்னர் அதனை அந்த வாகனத்தின் ஓட்டுநரிடம் ஒப்படைத்தார்.
பள்ளிக் குழந்தைகள் பயணிக்கும் வாகனத்தை பராமரிக்க அரசு கடும் விதிகளை வகுத்துள்ள நிலையில் இன்று தனியார் பள்ளி வாகன சக்கரம் பாதுகாப்பற்ற வகையில் கழன்று ஓடியது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
