அ. குமரேசன்
கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் மாநில அரசு நிறுவனத்திற்குச் சொந்தமான முந்திரித் தோட்டங்களில், கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் வான்வழியாக ஒரு பூச்சி மருந்து தெளிக்கப்பட்டு வந்தது. எண்டோசல்பான் என்ற அந்த மருந்தால் பூச்சிகள் எந்த அளவுக்கு அழிந்தன என்று தெரியவில்லை, ஆனால் அந்தப் பகுதி மக்களின் வாழ்நிலை வெகுவாகச் சீர்குலைந்தது. காற்றிலும் மண்ணிலும் நீரிலும் கலந்த அந்த மருந்து மனிதர்களின் உடலில் ஊடுருவி, குழந்தைகள் ஊனத்துடன் பிறந்தார்கள், பெண்கள் புற்று நோயால் தாக்கப்பட்டார்கள், ஆண்களின் விந்தணு பலவீனமடைந்தது, வன விலங்குகள் மடிந்தன…
என்டோசல்பான் தெளிப்பை நிறுத்தவும், இழப்பீடுகள் வழங்கவும் கோரி மக்கள் 2016 ஜனவரியில் திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் முன்பாகப் பட்டினிப் போராட்டம் நடத்தினார்கள். பல அமைப்புகளின் தலைவர்கள் அங்கே வந்து, போராட்டத்திற்குத் தங்களது ஒருமைப்பாட்டைத் தெரிவித்துச் சென்றார்கள். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு கண்டுகொள்ளாமலே இருந்தது. 93 வயது வி.எஸ். அச்சுதானந்தன் அங்கே வந்தார். தனது ஆதரவை வெளிப்படுத்தியதோடு யாரும் எதிர்பாராத வகையில் அவர்களில் ஒருவராக உட்கார்ந்துவிட்டார். அங்கிருந்தபடி முதலமைச்சருடன் கைப்பேசியில் தொடர்புகொண்டவர், “போராட்டக் களத்திலிருந்து பேசுகிறேன். அவர்களின் நிலைமை ரொம்பவும் பரிதாபகரகமாக இருக்கிறது. இதில் நீங்கள் தலையிடுகிற வரையில் நான் இங்கேயேதான் உட்கார்ந்திருப்பேன்,” என்று கூறினார்.

முதலமைச்சர் உமன் சாண்டி, பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்தோ, மூத்த தலைவரின் இந்த நேரடிப் பங்கேற்பு ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை எண்ணியோ உடனே தலையிட்டார். . அதிகாரிகள் குழு பேச்சு நடத்தியது. ஏற்கத்தக்க முடிவுகள் எட்டப்பட்டன. விஎஸ் என்றுமே மக்களோடு நிற்பவர், குரலற்றோரின் குரலாக ஒலிப்பவர் என்ற செய்தி மறுபடியும் உறுதிப்பட்டது. இந்தப் போராட்டப் பண்பு சிறுவயதிலிருந்தே அவரோடு வளர்ந்தது.
போர்க்குணம்
திருவிதாங்கூர் மன்னராட்சிப் பகுதியாக இருந்த ஆலப்புழா மாவட்டத்தின் புன்னப்புரா வட்டார பரவூர் கிராமத்தில் 1923 அக்டோபர் 20 அன்று வெலிக்கக்காத்து சங்கரன்–அக்கம்மா இணையரின் மகனாகப் பிறந்தார் அச்சுதானந்தன். நான்காம் வயதில் தாயையும் பதினோராவது வயதில் தந்தையையும் இழந்தவர், 7ஆம் வகுப்போடு பள்ளிக் கல்வியையும், குழந்தைப் பருவக் கும்மாளங்களையும் இழந்தார். தந்தை விட்டுச்சென்ற தையல்கடையில் தன் அண்ணனோடு சேர்ந்து வேலை செய்தார்.

பள்ளிக்குச் சென்ற நாட்களில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த உயர்சாதி என்று கூறிக்கொள்ளும் பிரிவைச் சேர்ந்த பையன்கள் அச்சுதானந்தனின் சமூக அடையாளத்தைச் சொல்லி அவமானப்படுத்தினார்கள். ஆவேசமடைந்த அவர் அவர்களைக் கடுமையாகத் திட்டிவிட்டு வீடு திரும்பினார். தந்தை இதற்காகத் தன்னைக் கடிந்துகொள்வார் என்று இவர் எதிர்பார்த்தார். மறுநாள் பள்ளிக்குப் புறப்பட்டபோது தந்தை இரும்புத் தகடுகள் இணைக்கப்பட்ட இடுப்புப் பட்டையை மாட்டிவிட்டார். தேவைப்பட்டால் அதைப் பயன்படுத்திக்கொள்ளக் கூறினார். அச்சனின் இந்த அணுகுமுறை அச்சுவின் போர்க்குணத்திற்குக் கூர் தீட்டியது.

தையல் கடைக்கு வரும் கயிறாலைத் தொழிலாளர்களும் விவசாயப் பாட்டாளிகளும் தங்களுடைய உழைப்பு உறிஞ்சப்படுவது பற்றிப் பேசிக்கொள்வார்கள். விடுதலைப் போராளிகளின் சந்திப்பிடமாகவும் இருந்த அந்தக் கடை சகோதரர்களுக்கு அரசியல் வகுப்பறையாக அமைந்தது. ஒரு கயிறாலையில் தொழிலாளியாகச் சேர்ந்தார் வி.எஸ். சில அடிப்படைப் புரிதல்கள் ஏற்பட்டவராக, நெல்வயல்கள் பரவியிருந்த குட்டநாடு வட்டாரத்தில் விவசாயத் தொழிலாளர்கள், கயிறுத் தொழிலாளர்களின் போராட்டங்களில் ஆதரவாளராகப் பங்கேற்றார். பின்னர் அவர்களை அணி திரட்டக்கூடியவராக உருவெடுத்தார். 15 வயதில், கயிறு நிறுவனங்களின் சுரண்டல்களுக்கு எதிரான தொழிற்சங்கப் போராட்டங்களில் முன்னணியில் நின்றவர், அரசியல் விழிப்போடு 1938இல் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கேற்றார்.

இரண்டே ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அவருடைய முனைப்புமிகு செயல்பாடுகள், மூன்றாவது ஆண்டிலேயே கோழிக்கோடு நகரில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநிலக் குழு மாநாட்டிற்கு ஒரு பிரதிநிதியாக அவரை அனுப்பிவைத்தன. மாநாடு முடிந்தபின் அவரை அழைத்துப் பேசிய முன்னணித் தலைவர் வி. கிருஷ்ணப்பிள்ளை, “கயிறு தொழிற்சாலை வேலை போதும் சகா, இளம் புரட்சிக்காரருக்கு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களிடையே பணியாற்ற வேண்டிய தேவை இருக்கிறதே,” என்றார். அதை ஏற்ற அச்சுதானந்தன், முழுநேர கம்யூனிஸ்ட் தோழராக மாறினார்.
திருவிதாங்கூர் அரசாட்சிப் பகுதியின் மன்னர் சித்திரைத் திருநாள் பலராம வர்மா என்றாலும், அவரால் நியமிக்கப்பட்ட திவான் ராமசாமி ஐயர் முடிவுகள் எடுப்பதில் செல்வாக்கு செலுத்தினார். திருவிதாங்கூரை அமெரிக்கா போல மாற்றப்போவதாக அறிவித்து தொழிற்சாலைகளை நிறுவுவது, நீர்ப்பாசனத் திட்டங்களைத் தொடங்குவது என்று சில நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டே, விவசாயிகளையும் தொழிலாளர்களையும் ஒட்டச் சுரண்டுவதற்கான ஏற்பாடுகளை இறுக்கமாக்கினார். குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சியையும் தொழிற்சங்கங்களையும் ஆபத்தானவை என்று அறிவித்து அடக்குமுறைகளை ஏவிவிட்டார்.

விடுதலைக்குப் பிறகு இந்தியாவோடு இணையாமல் திருவிதாங்கூரைத் தனிநாடாக ஆள்கிற நோக்கத்துடன்தான் சுதந்திர அமெரிக்கா போல மாற்றுவது பற்றி, மன்னரின் முழு ஒப்புதலுடன் பேசி வந்தார். கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டம் விவசாயிகளையும் தொழிலாளர்களையும் சுரண்டல் கொடுமைகளிலிருந்து விடுவிப்பதோடு, மன்னராட்சியிலிருந்து திருவிதாங்கூருக்கு விடுதலை பெறுவதாகவும் பரிணமித்தது. போராளிகளுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சியை முன்னாள் ராணுவ வீரர்கள் அளித்தார்கள். அதிலெல்லாம் வி.எஸ். தலையாய பங்கு வகித்தார்.
காவல்நிலைய சித்திரவதை
1946இல் ஒடுக்குமுறைகளின் உச்சமாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டார்கள். போராளிகள் திருப்பித் தாக்கியதில் 10 காவலர்களும் கொல்லப்பட்டார்கள். கைது வேட்டை கடுமையாக்கப்பட்டது. போராட்டத்திற்கு வழிகாட்டும் தலைவர்கள் தலைமறைவாகச் செயல்பட வேண்டுமென்ற கட்சிக் கட்டளைப்படி வேறு பகுதிக்குச் சென்று ஒரு தோழரின் வீட்டில் தங்கியிருந்த வி.எஸ்., கொடுமைகள் அளவின்றித் தொடர்வதைக் கேள்விப்பட்டவராகப் போராட்டக் களத்திற்குத் திரும்பி வந்தார்.
1946 அக்டோபரில் கைது செய்யப்பட்டவர், காவல்நிலையத்தில் கொடூரமான சித்திரவதைகளை எதிர்கொண்டார். குண்டாந்தடிகளால் அடிக்கப்பட்டு, துப்பாக்கி முனைகளால் குத்தப்பட்டவர் ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்தார். அவர் இறந்துவிட்டதாக நினைத்த காவல் அதிகாரிகள், சில்லறைத் திருட்டுகளில் ஈடுபட்டதற்காகக் காவல் நிலையத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த ஒருவரிடம் அவருடைய “உடலை” ஒப்படைத்து, காட்டுக்குள் வீசச்சொல்லி, சில காவலர்களோடு ஜீப்பில் ஏற்றி அனுப்பினர்.
வண்டி போய்க்கொண்டிருந்தபோது உடல் அசைவதைக் கவனித்த அந்தக் கைதி, உடனே பக்கத்து மருத்துவனைக்குப் போகுமாறு கூச்சல் போட்டுக் கட்டாயப்படுத்தினார். மருத்துவனையில் சேர்க்கப்பட்டுத் தன் உடல்நிலையோடும் போராடிய வி.எஸ். குணமடைந்த பின் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியா சுதந்திர நாடான பிறகு, 1948 பிப்ரவரியில்தான் விடுதலை செய்யப்பட்டார். தடிகளும் துப்பாக்கிக் கத்திகளும் தாக்கியதில் பாதிக்கப்பட்ட கால்களால் நடந்துதான் மறுபடியும் மாநிலம் முழுவதும் இயக்கப் பணிகளுக்காகவும் மக்கள் போராட்டங்களுக்காகவும் சுற்றத் தொடங்கினார். பிற்காலத்தில் வி.எஸ். “என் மீட்பராக வந்தவரைப் பார்க்க முடியாமலே போய்விட்டது,” என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

மக்களுக்கான போராட்டங்களில் பங்கேற்றதற்காக அந்த 16 மாதங்கள் உட்பட மொத்தம் ஐந்தரை ஆண்டுகள் சிறைகளில் அடைக்கப்பட்டவர்ல அவர். நான்கரை ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையில் இயக்கப் பணியை மேற்கொண்டவர். புன்னப்புரா–வயலார் போராட்டத்திற்கான சிறைவாசத்திற்குப் பிறகு, 1963இல், மறுபடியும் ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டார். இம்முறை அவர் மீது, கைது செய்யப்பட்ட இதர பல மார்க்சிஸ்ட்டுகளைப் போலவே, அன்றைய காங்கிரஸ் அரசு சுமத்திய குற்றச்சாட்டு –“சீன உளவாளி”! பின்னர் 1975இல் அவசரநிலை ஆட்சிக் காலத்தில், ஜனநாய உரிமைகளை மீட்கப் போராடியதற்காக 20 மாதங்கள் சிறைவாசம்.

கொள்கைக் போராட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் எழுந்த கொள்கைப் போராட்டமும் பெருமைக்குரியது. அதன் முடிவில், 1964இல் அதன் தேசியக் குழுவிலிருந்து 32 பேர் வெளியேறினார்கள். அவர்களின் முயற்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானது. அப்போது முதல் அக்கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகச் செயல்பட்டவர், 1980 முதல் 1992 வரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பொறுப்பை நிறைவேற்றினார். 1985இல் அரசியல் தலைமைக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வயது முதிர்வின் காரணமாக மத்தியக் குழு கூட்டங்களுக்கான சிறப்பு அழைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 2022இல் மத்தியக் குழுவிலிருந்து அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது..மார்க்சிஸ்ட் கட்சியைக் கட்டிய அந்த 32 முன்னோடிகளில் கடைசியாக எஞ்சியிருந்தவராக இந்த ஜூலை 21 வரையில் வாழ்ந்தவர் அச்சுதானந்தன்.
எந்தப் பொறுப்பில் இருந்தாலும இல்லாவிட்டாலும் ஒரு கம்யூனிஸ்ட் என்ற பொறுப்புணர்வோடு போராட்டக் களங்களில் மக்களோடு இணைந்திருந்தார். அவரை மக்கள் “கேரளத்தின் ஃபிடல் காஸ்ட்ரோ” என்று குறிப்பிட்டதில் வியப்பில்லை.. மாநில சட்டமன்றத்திலும் தங்களுக்காகப் போராடுவார் என்று உறுதியாக அறிந்திருந்த மக்கள் அவரை 1967, 1970, 1991, 2001, 2006, 2211, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களின் மூலம் பேரவைக்கு அனுப்பினர். 1991–1996, 2001–2006, 2011–2016 ஆகிய கட்டங்களில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக, மிக அதிக காலம், 15 ஆண்டுகள், அந்தப் பொறுப்பில் செயல்பட்டவரானார் . 2006 முதல் 2011 வரையில் முதலமைச்சராகவும் மக்கள் பணியாற்றினார். கேரளத்தில் 82 வயதில் முதலமைச்சரான மிக மூத்தவர் அவர்தான். 2016 முதல் 2021 வரை கேரள நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் தலைவராக, அமைச்சர் நிலைக்கு நிகரான பொறுப்பில் பங்களித்தார்.

நேர்மைத் துணிவு
சமத்துவ லட்சியம், சமூக நீதிக் கொள்கை, உழைப்பாளர் உரிமைகள் இவற்றை நெஞ்சில் தாங்கிய அவருக்கு நேர்மையும் துணிவும் உடன்பிறப்புகளாக இருந்தன. முதலமைச்சராக இருந்தபோது அவர் மேற்கொண்ட “ஆபரேஷன் மூணாறு” நடவடிக்கை அந்த நேர்மைக்கும் துணிவுக்குமான சாட்சிகளில் ஒன்று. இயற்கையெழிலும், சுற்றுச் சூழல் முக்கியத்துவமும் வாய்ந்த வட்டாரம் மூணாறு. தேயிலைத் தோட்டங்களின் பசுமையுமுள்ள அந்த மலைப்பகுதியில் பல தனியார்கள் ஆக்கிரமித்துத் தங்கும் விடுதிகளையும் தங்களுடைய தோட்டங்களையும் அமைத்திருந்தனர். டாட்டா குழுமம் உள்ளிட்ட அரசியல் செல்வாக்கு மிக்க பெருநிறுவனங்கள், சுற்றுலா விடுதி உரிமையாளர்கள், நில மோசடிப் பேர்வழிகளால் மக்கள் அணுக முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டிருந்தது. அப்பகுதியில் வாழ்ந்துவந்தோரின் நில உரிமை போலி ஆவணங்களைப் பயன்படுத்திப் பறிக்கப்பட்டிருந்தது.
அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அறிவித்த விஎஸ், பதவிக்கு வந்த ஒரே ஆண்டில், 2007இல் ஆபரேஷன் மூணாறு நடவடிக்கைக்கான சிறப்புப் படையை அமைத்தார். ஊடகவியலாளர்களால் “வி.எஸ்.சின் பூனைகள்” என்று குறிப்பிடப்பட்ட சிறப்புப் படையினர் குறுக்கீடுகள் பற்றிய அச்சமின்றிக் கறாரான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.. ஆக்கிரமிப்புப் பகுதிகள் மீட்கப்பட்டன. நடவடிக்கையை நிறுத்திக்கொள்ளுமாறு தில்லி உட்படப் பல மட்டங்களிலிருந்து வற்புறுத்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் பெரும் பிரச்சினையாக்கின. கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தோர் மட்டுமல்லாமல், சொந்தக் கட்சியிலேயே கூட சிலர் அதை எதிப்பதைக் கண்டார் அவர். எதைக் கண்டும் அவர் பின்வாங்கவில்லை. ஒரே மாதத்தில் 11,350 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.விதிகளை மீறிக் கட்டப்பட்டிருந்த விடுதிகளும் பிற கட்டடங்களும் இடிக்கப்பட்டன. இன்று தில்லியிலும் சில வட மாநிலங்களிலும் எளிய மக்களின் வீடுகள் மீது ஏற்றப்படும் புல்டோசர்கள் போன்றதல்ல, அதிகாரத் தொடர்பும் பணபலமும் கொண்டவர்களின் நில வளைப்பைத் தகர்த்த புல்டோசர்கள் அவை.

முதலமைச்சராக அவர் மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கையும் பெரிய பேசுபொருளானது. 2007இல் அவர் சபரிமலைப் பயணம் மேற்கொண்டார்! உறுதிமிக்க ஒரு கம்யூனிஸ்ட் இப்படிப் புனித யாத்திரை போவதா என்று ஒரு பகுதியினர் விமர்சித்தனர். ஆனால், லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகிற மலை தொடர்பாகக் கூறப்பட்ட சில பிரச்சினைகளை நேரில் கண்டறிவதற்காகவே அவர் சென்றார். சபரி மலையில் குறிப்பிட்ட இடத்திற்கு மேல் கால்நடையாகவே செல்ல முடியும். அத்துடன், 84வயதில் அப்படி அங்கே சென்றதில், அவருடைய உடல் நிலை சார்ந்த கவலைகளையும் மருத்துவர்கள் உட்படப் பலர் வெளிப்படுத்தினார்கள். நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதைத் தவற விடாதவரான அவர், அந்தக் கவலைகளையும் தேவையற்றவை என்று மெய்ப்பித்துக் காட்டினார். கொள்கை உறுதியில் மட்டுமல்லாமல் உடல் உறுதியிலும் இளைய தலைமுறைகளுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் அவர்.
அவருடைய “நம்பிக்கை” பற்றிய இன்னொரு சுவையான செய்தியும் உண்டு. முதலமைச்சர் அச்சுதானந்தனிடம் பள்ளிக் குழந்தைகள் விளையாட்டாக இப்படிக்க் கேட்டார்கள்: “உங்களுக்கு எந்த சாமியை ரொம்பப் பிடிக்கும்?“ அவர்களை அணைத்துக்கொண்டு அவர் இப்படிச் சொன்னார்: “நம் அனைவரையும் போல என்னையும் சாமிக் கதைகள் ஈர்க்கின்றன. ஆனால் மற்ற எல்லாரையும் போலவே நானும் அந்த சாமிகள் இருக்கிறார்களா, இருக்கிறார்கள் என்றால் எந்தக் கோளில் இருக்கிறார்கள் என்று யோசிக்கிறேன்.”
கருத்தில் உறுதி
தன் மனதில் தோன்றும் கருத்துகளைத் தயக்கமின்றி வெளிப்படுத்தினார் வி.எஸ். சில நேரங்களில் கட்சியின் நிலைப்பாடுகளுக்கு எதிரான கருத்துகளையும் வெளியே கூறிவிடுவார். அதற்காக, உட்கட்சி நடவடிக்கைகளையும் எதிர்கொண்டார். அப்படிப்பட்ட ஒரு சூழலில், ஒரு செய்தியாளர் அவரிடம், “கட்சித் தலைமை இப்படி அடிக்கடி உங்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது, பிறகு ஏன் கட்சியில் தொடர்கிறீர்கள்,” என்று கேட்டார். அதற்கு வி.எஸ். “எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். அதேவேளையில் கட்சிக்காகத்தானே நான் பல ஆண்டுகளாகப் போராடி வந்திருக்கிறேன்,” என்று பதிலளித்தார்.

அவரது இணையர் வசுமதி ஒரு செவிலியர். அவசரநிலை ஆட்சிக்காலத்தில், அவர் மருத்துவனையில் இரவுப் பணியில் இருந்த நேரத்தில்தான், வீட்டில் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தபோது காவல்துறையினர் உள்ளே வந்து அச்சுதானந்தனைக் கைது செய்து கொண்டு போனார்கள். அதன் பின் 20 மாதங்கள் கழித்து சிறைமீண்டு வந்தபோதுதான் இவர்களால் அவரைப் பார்க்க முடிந்தது. அப்போதும் சரி, மக்கள் பிரச்சினைகளுக்காக வி.எஸ். வெளியே போராடிக் கொண்டிருந்த நாட்களிலும் சரி, அவருடைய எளிமையான வாழ்க்கை முறையையும் ஏற்றுக்கொண்டவராகக் குடும்பத்தைக் கவனிக்கும் போராட்டத்தை இணக்கத்தோடு வெற்றிகரமாக நடத்திவந்திருக்கிறார். இன்றும் அதையெல்லாம் உணர்வுப்பூர்மாக நினைவுகூர்கிறார். அந்த அனுபவங்களைக் கட்சி உறுப்பினரான மகன் அருண்குமார், அறிவியலாளரான மகள் ஆஷா ஆகியோரும் பெருமையோடு பகிர்கிறார்கள்.
எடுத்துச் சொல்வதற்கு இன்னும் ஏராளமான அத்தியாயங்கள் இருக்கின்றன. பொது வாழ்க்கையில் ஈடுபடுவதன் உன்னதத்திற்கும், போராட்டத் தழும்புகளின் பெருமிதத்திற்கும் எடுத்துக்காட்டாக என்றென்றும் நினைவுகூர்ந்து பகிரப்பட்டிருக்கும் வி.எஸ். வரலாறு.