ADVERTISEMENT

பாகுபாடுகளை ஆதரிக்கும் பாஜக அரசு!

Published On:

| By Kavi

– ரவிக்குமார்

உயர்கல்வி நிறுவனங்களில் பாகுபாடுகளை தடுப்பதற்கு பல்கலைக்கழக மானியக் குழு ( யுஜிசி) வெளியிட்டிருந்த வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் 29.1.2026 அன்று தடை செய்துள்ளது.

ADVERTISEMENT

“நிபுணர்கள் குழு ஒன்று அந்த வழிகாட்டு நெறிமுறைகளை ஆய்வு செய்து பரிந்துரைக்க வேண்டும். அதுவரை 2012 ஆம் ஆண்டு நெறிமுறைகளே நடைமுறையில் இருக்கும்” என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களில் சாதி, மதம், மொழி, பாலினம் முதலானவற்றின் அடிப்படையில் பாகுபாடுகள் நிலவுகின்றன என்பது பல்வேறு அறிக்கைகளின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

2014 மற்றும் 2021-க்கு இடையில் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் 122 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். 2021-ல் மக்களவையில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலின்படி, அவர்களில் 24 பேர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மூன்று பேர் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள், மற்றும் 41 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்தவர்கள்.

நாடாளுமன்றக் குழு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தரவுகளின்படி, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடு குறித்த புகார்கள் 2019-20 முதல் 2023-24 வரையிலான காலத்தில் 118.4% அதிகரித்துள்ளன.

ADVERTISEMENT

இந்தக் காலகட்டத்தில், 704 பல்கலைக்கழகங்கள் மற்றும் 1,553 கல்லூரிகளில் உள்ள சம வாய்ப்புப் பிரிவுகள் மற்றும் பட்டியல் சாதி/பழங்குடியினர் பிரிவுகளிலிருந்து யுஜிசி 1,160 புகார்களைப் பெற்றது. இந்தச் சம்பவங்களின் எண்ணிக்கை 2019-20-ல் 173-லிருந்து 2023-24-ல் 378 ஆக அதிகரித்துள்ளது என்று அந்தத் தரவுகள் காட்டுகின்றன.

File:Supreme Court of India 01.jpg - Wikimedia Commons

உயர்கல்வி நிறுவனங்களில் பாகுபாடுகளைத் தடுப்பதற்கென 2012 ஆம் ஆண்டு ஒரு வழிகாட்டு நெறிமுறை யுஜிசியால் உருவாக்கப்பட்டது. ஆனால் அதை செயல்படுத்தித்தான் ஆகவேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் விதிக்கப்படவில்லை. அதனால் அது காகிதத்தில் மட்டுமே இருந்தது.

சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் காரணமாக உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி , எஸ் டி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்று கோரி அவ்வாறு தற்கொலை செய்து கொண்ட பாயல் தத்வி, ரோகித் வெமுலா ஆகிய மாணவர்களின் தாயார்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வின் முன்பு மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் சில பரிந்துரைகள் கொண்ட குறிப்பு ஒன்றை அளித்தார்.

ரோஹித் வெமுலா - விக்கிபீடியா

(i) பாகுபாடான நடைமுறைகளுக்குத் தடை

அனைத்து வகையான பாகுபாடுகளுக்கும் தெளிவான தடை விதிக்கப்பட வேண்டும்; அவற்றை மீறும் நபர்களுக்கு ஒழுக்க நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.

(ii) பிரித்து வைத்தல் கூடாது

தரவரிசை அல்லது கல்வித் திறன் அடிப்படையில் விடுதிகள், வகுப்பறைகள் அல்லது நடைமுறைப் பயிற்சி (practical) குழுக்களை பிரித்து வைப்பதற்குக் கடுமையான தடை விதிக்கப்பட வேண்டும்.

(iii) உதவித்தொகை வழங்கல்

கல்வி உதவித்தொகையை விடுவிப்பதில் அரசு செய்யும் தாமதத்தின் காரணமாகக் கல்வி நிறுவனங்கள் மாணவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்கவும், முறையான கண்காணிப்பும் புகார் பதிவு வசதியும் கிடைக்கவும், உதவித்தொகை வழங்கும் செயல்முறை முழுமையாக டிஜிட்டல் முறையில் அமல்படுத்தப்பட வேண்டும்.

(iv) புகார்களுக்குத் தீர்வு

பாதிக்கப்படும் மாணவர்கள் புகார் அளிப்பதற்காக ஒரு புகார் தீர்வுக் குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுவின் உறுப்பினர்களில் 50% பேர் எஸ்சி/எஸ்டி/ஓபிசி சமூகங்களைச் சேர்ந்தவர்களாகவும், அதே சமூகத்தைச் சேர்ந்தவர் தலைவராகவும் (Chairperson) இருக்க வேண்டும். அக்குழுவின் உத்தரவுகள் குறித்து தேசிய எஸ்சி/எஸ்டி ஆணையத்தில் மட்டுமே மேல்முறையீடு செய்ய வழிவகை செய்தப்பட வேண்டும்.

(v) புகார் அளிப்பவர்களின் பாதுகாப்பு

விசாரணை நடைபெறும் காலத்தில் புகார் அளிப்பவர்கள் தொந்தரவு செய்யப்படவோ மிரட்டப்படவோ கூடாது என்பதையும், சட்டப்படி தங்கள் புகார்களைத் தொடர அனுமதிக்கப்பட வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்த சாட்சிப் பாதுகாப்பு (Witness Protection) நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

(vi) அலட்சியத்திற்கான தனிப்பட்ட பொறுப்பு

கல்வி நிறுவத்தின் தலைவர் உட்பட அனைத்து பணியாளர்களும் அலட்சியத்திற்குத் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டியவர்களாகக் கருதப்பட வேண்டும்.

(vii) மனநல ஆலோசனை

விளிம்புநிலைக் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள்/விண்ணப்பதாரர்களுக்கு உதவுவதற்காக, ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

ஆர்ஜி கர் வழக்கில் பெங்கால் மருத்துவர்களின் சார்பில் மூத்த வழக்கறிஞர் இந்திரா  ஜெய்சிங் யார்?

உள்ளிட்ட 10 பரிந்துரைகள் அந்தக் குறிப்பில் இடம்பெற்றிருந்தன.

அந்தக் குறிப்புகளைப் படித்த நீதிபதிகள் அவற்றைத் தமது உத்தரவில் குறிப்பிட்டு ‘புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்’ என்று பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு கடந்த 15.09. 2025 அன்று உத்தரவிட்டனர்.

அதனடிப்படையில் பல்கலைக்கழக மானியக் குழு நெறிமுறைகளின் வரைவு ஒன்றை உருவாக்கியது. அதன்மீது வல்லுநர்கள் பலரும் கருத்துகளைத் தெரிவித்தனர். அதற்கேற்ப திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது.

எஸ்சி, எஸ்டி பிரிவுகள் மட்டுமின்றி பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள், பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் ( EWS) பெண்கள் ஆகியோரும் பாகுபடுத்தப்படக் கூடாது என இந்த நெறிமுறைகள் குறிப்பிட்டன.

இதில் உயர் சாதிகளைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்க வேண்டும் என வட இந்திய மாநிலங்களில் சில உதிரிக்குழுக்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. உத்தரப் பிரதேசத்தில் திட்டமிட்ட முறையில் இந்த எதிர்ப்பு ஊதிப் பெருக்கப்பட்டது.

யுஜிசியின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்குத் தடை விதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் 3 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது ஒன்றிய அரசின் வழக்கறிஞர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

யுஜிசி புதிய விதிக்கு எதிர்ப்பு! ராஜிநாமா செய்த அதிகாரி இடைநீக்கம்! | ugc  city magistrate suspends

மனுதாரர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இடைக்கால தடை விதித்துள்ளனர். உயர்சாதியினரைக் கொண்ட பொதுப் பிரிவு மாணவர்களையும் ஏன் இதில் உள்ளடக்கக்கூடாது எனக் கேட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.

தற்போது தடை விதித்துள்ள நீதிபதிகள் சூர்யகாந்த், ஜொய்மால்யா பக்‌ஷி ஆகிய அதே இரண்டு நீதிபதிகள்தான் 15.09.2025 இல் புதிய நெறிமுறைகளை உருவாக்குமாறு யுஜிசிக்கு உத்தரவிட்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்குப் பாதுகாப்பாக ஒன்றிய அரசாங்கம் எந்த நடவடிக்கையை எடுத்தாலும் அதற்கு பாஜக ஆதரவு உதிரி இயக்கங்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதும், நீதிமன்றங்கள் அந்த எதிர்ப்புகளின் அழுத்தத்துக்குப் பணிந்து தீர்ப்புகளை வழங்குவதும் தொடர் கதையாக உள்ளது.

இது திட்டமிட்ட முறையில் பாஜக நடத்தும் நாடகமேயன்றி வேறல்ல. எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரை உயர் கல்வியிலிருந்து ஓரங்கட்டுவதற்காகவே தேசியக் கல்விக் கொள்கையை ஒன்றிய பாஜக அரசு உருவாக்கியுள்ளது. சமூகநீதி சக்திகள் இதைப் புரிந்துகொண்டு இந்த விதிகளை நீர்த்துப்போக வைக்காமல் தடுக்க வேண்டும்.

கட்டுரையாளர் குறிப்பு:

 

 

முனைவர் டி.ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்  (விழுப்புரம் மக்களவைத் தொகுதி), எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share