செந்தில் பாலாஜி மீதான விசாரணையை தாமதப்படுத்த முயற்சிப்பதாக தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 29) கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை பெற்றுத் தருவதாக கூறி பணம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறையாக கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் அமைச்சராக பதவியேற்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை முறையிட்டதன் எதிரொலியாக, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், செந்தில்பாலாஜி மீதான பணமோசடி வழக்கின் பிரதான குற்றப்பத்திரிகையுடன் பல துணை குற்றப்பத்திரிகைகளை சிறப்பு நீதிமன்றம் இணைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 28 ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, பண மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஒய் பாலாஜி என்பவர் தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பாக மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி, ”தமிழக அரசு தனது சொந்த அமைச்சருடன் கூட்டுச் சேர்ந்து காப்பாற்ற முயற்சிக்கிறது. இந்த வழக்கில் 2000 பேருக்கு மேல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வழக்கை முறையாக தமிழக நடத்தவில்லை” என குற்றஞ்சாட்டினார்.
அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அமித் ஆனந்த் திவாரி மற்றும் டாக்டர் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், “மனுதாரர் தாக்கல் செய்த மற்றொரு மனுவை உச்ச நீதிமன்றம் தகுதியின் அடிப்படையில் ஏற்கவில்லை, அதில் அவரது நடத்தை கேள்விக்குள்ளாக்கப்பட்டது” என வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, “இரண்டு வழக்குகளில் மட்டும் லஞ்சம் கொடுத்ததாக சுமார் 2000-2500 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அதற்கான காரணம் என்ன?
ஒவ்வொரு வழக்கிலும் 1000 பேர குற்றஞ்சாட்டினால் விசாரணையை எப்போது முடிப்பது? இப்படியே போனால் எத்தனை ஆண்டுகளானாலும் இந்த வழக்கு முடியப் போவதில்லை.
வேலைக்கு பணம் கொடுத்ததாக ஊழல் வழக்குகளில், வேலை பெற லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் சுமார் 2000 பேரை குற்றவாளிகளாகச் சேர்த்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான விசாரணையை தாமதப்படுத்த தமிழக அரசு முயற்சிக்கிறது. அமைச்சரின் வாழ்நாளில் விசாரணைகள் முடிவடையாமல் இருப்பதை உறுதி செய்வதே அரசின் முயற்சியாக உள்ளது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
தொடர்ந்து, ”அமைச்சரைத் தவிர, வழக்கில் கூறப்படும் தரகர்கள்/இடைத்தரகர்கள் யார்? அமைச்சரின் பரிந்துரையின் பேரில் செயல்பட்டதாகக் கூறப்படும் அதிகாரிகள் யார்? தேர்வுக் குழு உறுப்பினர்கள் யார்? நியமனம் வழங்கிய அதிகாரிகள் யார்?என்ற கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும், ”இந்த வழக்கையும் இதே போன்ற நிலுவையில் உள்ள வழக்குகளையும் நாளைக்கு பட்டியலிட்ட நீதிபதிகள் அமர்வு, செந்தில்பாலாஜி வழக்கு விசாரணையை கூடிய விரைவில் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.