I Love You சொல்வது பாலியல் வன்கொடுமை அல்ல என கூறி போக்சோ வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்துள்ளது மகாராஷ்டிரா உயர்நீதிமன்றம். Maharashtra Nagpur Bench
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 2015-ம் ஆண்டு இளைஞர் ஒருவர் 17 வயது சிறுமியின் கைகளைப் பிடித்து I Love You என கூறியிருக்கிறார். இது குறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நாக்பூர் செசன்ஸ் நீதிமன்றம், I Love You சொன்ன இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 2017-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்புக்கு எதிராக மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் உயர்நீதிமன்ற கிளையில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஊர்மிளா ஜோஷி விசாரித்து வந்தார். இம்மேல்முறையீட்டு வழக்கில், இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த கீழ் நீதிமன்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும், I Love You என இளைஞர் சொன்னதன் பின்னால் பாலியல் சீண்டல் நோக்கம் இல்லை. பொதுவாக பெண்களின் ஆடைகளை வலுக்கட்டாயமாக கழற்றுதல், பெண்களின் கண்ணியத்தை அவமதித்தல் உள்ளிட்டவைதான் பாலியல் நோக்கம் கொண்டவை. இதனால் I Love You என கூறியது மானபங்கப்படுத்தும் செயல் அல்ல எனவும் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.