மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் வாக்கு திருட்டு போராட்டத்தை மடைமாற்றும் வகையில் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், தமிழகத்துக்கான கல்வி நிதியை மத்திய அரசு வழங்க கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாகவும் அவர் தமது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் இணையாததால் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கு என வர வேண்டிய தொகையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கான ரூ.2 ஆயிரத்து 152 கோடியை உடனடியாக வழங்க மத்திய அரசை வலியுறுத்தி திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்கினார்.இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தின் 2ஆவது நாளான நேற்று அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகாந்த் செந்தில் 3 ஆவது நாளான இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையில் சென்னை சத்திய மூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் என்னைப் பொறுத்தவரை எம்.பி. சசிகாந்த் செந்தில் இந்த உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும். நாடு முழுவதும் ஓட்டு திருட்டு விவகாரம் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நேரத்தில் அதனை மடைமாற்றம் செய்கிறோமோ என்ற அச்சம் உள்ளது.
இதனால் ராகுல் காந்தியை முன்னிறுத்தி நாம் இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். உங்கள் போராட்டத்தை இதோடு முடித்துக் கொள்ளுங்கள். நல்ல நோக்கத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டாலும் அதற்கான தருணம் இது அல்ல.
ராகுல் காந்தியின் போராட்டத்தை மக்கள் பேசும் தருணத்தில் அதற்கு நாமே இடையூறாக இருக்கக் கூடாது . வரும் 7ம் தேதி திருநெல்வேலியில் நடத்தப்பட்டும் வாக்கு திருட்டு தொடர்பான மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியர்களுக்குக் கடைசியாக இருக்கும் ஒரே உரிமை வாக்குரிமை மட்டும் தான். அதை பறிக்க தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்த செய்திகள் வேகமாக பரவி வரும் நிலையில் இதை வேறு வகையில் மடைமாற்றம் செய்து விடுவார்களோ என்ற அச்சம் உள்ளது. ராகுல் காந்தியை முன்னிறுத்தி எடுக்கும் போராட்டங்களுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி சசிசாந்த் செந்திலின் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையே கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.
நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு
இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சசிகாந்த் செந்தில் அவர்களே, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். இது அரசியல் பற்றியது அல்ல.. கல்வி உரிமை மற்றும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றியது.. மத்திய அரசின் இந்த அயோக்கியத்தனமான நடத்தைக்கு எதிராக குரல் எழுப்புவோம்” என்று பதிவிட்டுள்ளார்.