‘அம்மா திமுக’ கட்சி பெயரை இன்று அறிவிக்கும் சசிகலா?

Published On:

| By Pandeeswari Gurusamy

Sasikala

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இன்று ‘அம்மா திமுக’ என்ற பெயரில் தனது புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, பசும்பொன்னில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சசிகலா பங்கேற்றார். அப்போது, தான் புதிய கட்சி தொடங்க உள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்கான புதிய கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில், இன்று பிற்பகலில் கட்சியின் பெயரை அவர் முறைப்படி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ராமதாஸ் – சசிகலா திடீர் சந்திப்பு

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதாகக் கூறப்படும் சூழலில், ராமதாஸ் தரப்பு பாமக இதுவரை எந்தக் கூட்டணியையும் உறுதி செய்யவில்லை.

இந்த நிலையில், கடந்த மார்ச் 10ஆம் தேதி தைலாபுரம் இல்லத்தில் மருத்துவர் ராமதாஸை சசிகலா நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
பாமக – சசிகலா கூட்டணி?

சசிகலா தொடங்க உள்ள ‘அம்மா திமுக’, பாமகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு, கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share