வைஃபை ஆன் செய்ததும், ‘சொல்லி அடிச்ச செங்ஸ்’ என டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
மனம் திறக்கிறேன் என சொன்ன செங்கோட்டையன் பிரஸ் மீட்டா?
ஆமாம்யா.. ரொம்பவே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய செங்கோட்டையன், இன்றைய பிரஸ் மீட்டில் அதிமுகவில் தாம் சீனியர் என்பதை அழுத்தமாக பதிவு செய்துவிட்டு, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாட்களில் மீண்டும் சேர்க்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
செங்கோட்டையன் பிரஸ் மீட்டுக்கு ரியாக்சன் எப்படியாம்?
செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஈரோடு வடக்கு மாவட்ட முக்கிய நிர்வாகிகள் 15 பேர் உடனிருந்தனர். இவர்களுடன் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. பண்ணாரி, மாஜி எம்பி சத்தியபாமாவும் இருந்தனர்.
கோபி அதிமுக ஆபீசில் பிரஸ் மீட்டை முடித்த கையோடு ‘தோட்டத்து’ பங்களாவுக்கு போனார் செங்கோட்டையன். அங்கே, ஓபிஎஸ் நியமித்த அவரது மா.செ.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் செங்கோட்டையனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது, “அண்ணன்தான் உங்களை சந்தித்து ஆதரவு தர சொன்னார்.. நாங்க என்ன நினைக்கிறோமோ அதை அப்படியே பேசிட்டீங்க.. ரொம்ப மகிழ்ச்சி அண்ணே… நீங்க பேசிட்டீங்க.. இனி எல்லாம் சரியாகிடும்ணே” என நெகிழ்ந்தனர்.
சரி.. எடப்பாடி பழனிசாமி ரியாக்ஷன் என்னவாம்?
இன்றைக்கு தேனியில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பதாக இருந்தது. செங்கோட்டையன் பிரஸ் மீட் ஆரம்பித்த போதே, எடப்பாடியின் கலந்துரையாடல் ரத்துன்னு செய்தி வந்துருச்சு..
தேனி நிகழ்ச்சியை கேன்சல் செய்த எடப்பாடி பழனிசாமி, தேனியில் உள்ள ABM ஹோட்டலின் பின்பக்கம் கட்டப்பட்டுள்ள புது பில்டிங்கின் முதல் மாடி சூட் ரூமில்தான் தங்கி இருந்தார்.
செங்கோட்டையன் பிரஸ் மீட்டை லைவ்வாகப் பார்க்கலாம் என டிவியை ஆன் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு ‘ஷாக்’.. டிவி ஒர்க் ஆகலையாம்.. இதனால் டென்ஷனாகிட்டார்.. அப்புறமா ஹோட்டல் ஊழியர்கள் ஓடிவந்து சரி செஞ்சு கொடுக்க, செங்கோட்டையன் பிரஸ் மீட்டும் ஓடிக் கொண்டே இருந்தது.
இப்படி டென்சனுடன் பார்த்த செங்கோட்டையன் பிரஸ் மீட் முடிந்ததும் எடப்பாடி தனது சகாக்களிடம் பேசும் போது, “நம்ம நிலைப்பாடு வெளியே போனவங்களை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பதே இல்லை என்பதுதான்.. அதில் எந்த மாற்றமும் இல்லை.. என்ன செய்கிறார்னு பார்ப்போம்.. தேர்தல் நேரத்தில இப்படி எல்லாம் சிலர் பேசுவது வழக்கம்தானே” என அசால்ட்டாக சொல்லி இருக்கிறார்.
கோபி தோட்டத்து பங்களாவில் முகாமிட்டிருந்த செங்கோட்டையனுக்கு நெருக்கமான வட்டாரங்களிடம் நாம் பேசினோம். அப்போது செங்கோட்டையன் தங்களிடம் சொன்ன சில விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
“அண்ணனின் இந்த ஆபரேஷன் ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கிடுச்சு.. சின்னம்மாவை (சசிகலா) 3 முறை அண்ணன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.. அவங்க கொடுத்த அட்வைஸ்படிதான் எல்லாமே நடக்குது. அதிமுகவில் எடப்பாடிக்கு அடுத்ததாக இருக்கக் கூடிய 2-ம் கட்ட தலைவர்கள் 10 பேரிடம் இதுபற்றி அண்ணன் பேசினார். ஒன்றுபட்ட அதிமுகவாக இருந்தால்தான் நல்லது என்ற கருத்துக்கு ஆதரவாக இந்த 10 சீனியர்களையும் ஒன்று சேர்த்தார் அண்ணன்.
வேலுமணி
தங்கமணி
கேபி அன்பழகன்
திண்டுக்கல் சீனிவாசன்
நத்தம் விஸ்வநாதன்
சி.விஜயபாஸ்கர்
ராஜேந்திரபாலாஜி
தளவாய் சுந்தரம்
கடம்பூர் ராஜூ
ராஜன் செல்லப்பா
என இந்த 10 பேரும் இப்போதைக்கு அண்ணனை முழுமையாக ஆதரிக்கிறாங்க..
இந்த 10 பேரிடமும் அண்ணன் திரும்ப திரும்ப சொன்னது, “எல்லோரையும் சேர்க்கலைன்னா கட்சியோட எதிர்காலம் என்னாகும்? நாம ஜெயிக்கவே முடியாது இல்லையா? அதனால வெளியே இருப்பவங்களை சேர்க்கனும்” என்பதுதான்.. இந்த 10 பேரும், “நீங்க சொல்றதுதான் சரி.. வெளியே இருக்கிறவங்களையும் சேர்க்கனும்” என உறுதியாக சொல்லி இருக்கின்றனர்” என்றனர்.
கோபி தோட்டத்து பங்களாவில் ஆதரவாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “இந்த மாதிரி வேற யாரும் பிரஸ் மீட் கொடுத்திருந்தா உடனே ஜெயக்குமார், செல்லூர் ராஜூவை விட்டு பதில் தந்திருப்பாரு எடப்பாடி.. என்னோட இந்த கருத்தை 80% கட்சி நிர்வாகிகள் ஆதரிக்கிறாங்க.. இது எடப்பாடிக்கு நல்லாவே தெரியும். அதனால்தான் உடனடியாக அங்க இருந்து ரியாக்ஷன் வரலை” என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
சரி.. செங்கோட்டையன் கொடுத்த 10 நாள் கெடுவுக்கு பின்னர் என்னதான் நடக்கும்?
இதுபற்றி தமது ஆதரவாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “நாம பிரஸ் மீட்டில் தெளிவாகவே, அடுத்த 10 நாட்களில் அதிமுகவுக்கு வெளியே இருக்கிறவங்களை கட்சியில் சேர்க்கிற முயற்சியையாவது எடுக்கனும் என சொல்லிட்டோம்.. அப்படி எந்த முயற்சியும் எடுக்கலைன்னா நம்ம கருத்தை ஆதரிக்கிற எல்லோரையும் ஒருங்கிணைத்து அடுத்த நடவடிக்கையை எடுப்போம்.. அதனால அதிமுகவில் இருந்து நம்மை நீக்கினால் நீக்கட்டும்.. அதனால்தான், அதிமுகவின் ஒற்றுமைக்காக ‘எந்த தியாகத்தையும் செய்ய தயார்னு’ அறிவிச்சோம்.. காத்திருந்து முடிவெடுப்போம்” என்றாராம்.
பாஜக தரப்பில் என்ன சொல்கிறார்கள்?
அவங்களைப் பொறுத்தவரை, “ஒன்றுபட்ட அதிமுக நல்லதுதானே.. கட்சி வலிமையாக இருக்கனும்னா எல்லோரையும் சேர்க்கலாம்.. அது நமக்கும் நல்லதுதானே” என்கின்றனர்.
சரி.. செங்கோட்டையன் ஆபரேஷனில் அடுத்த ஆக்ஷன் என்னவாம்?
“டெல்லியில் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறாராம்.. அதேபோல ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு வரும் 10, 11-ந் தேதி எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் வருகிறார்.. இதில் செங்கோட்டையன் கலந்துகொள்ள மாட்டார்.
ஓஹோ, செங்கோட்டையன் சந்தித்து பேசிய ‘அந்த 10’ பேர் என்ன சொல்றாங்க?
அவங்களைப் பொறுத்தவரைக்கும், “செங்கோட்டையன் சொன்னதை ஆமா, சரின்னு கேட்டுகிட்டோம்.. ஆனால் அந்த மாதிரிதான் எதுவும் இதுவரைக்கும் நடக்கலையே.. எங்களைப் பொறுத்தவரைக்கும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொல்றதுதான் இறுதி முடிவு.. இதுல நாங்க உறுதியாக இருப்போம் என புதிர் போடுவதாக டைப் செய்துவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்