பேரறிஞர் அண்ணாவின் 57-ஆவது நினைவு நாளில், நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் வி.கே. சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:“‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்று கூறிய பேரறிஞர் அண்ணாவின் 57-ஆவது நினைவு நாளில், அவருடைய கொள்கைகளையும் மக்களுக்கு அவர் செய்த சேவைகளையும் நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு வந்துள்ளேன்” என்றார்.
மத்திய அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு,
“மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை எப்போதும் உள்ள சாதாரண அறிக்கையாகத்தான் நான் பார்க்கிறேன். அதில் முக்கியமாகச் சொல்லக்கூடியது என்றால் தமிழ்நாட்டிற்கு எதுவும் பெரிதாக அறிவிக்கப்படவில்லை. பொதுவாக அவர்கள் சொல்லியிருப்பது, பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்படும் என்றுதான். அது ஏற்கனவே நமது தமிழகத்தில் 2013-ஆம் ஆண்டு அம்மாவின் ஆட்சியில் வேலை செய்யும் பெண்களுக்காக பல இடங்களில் செய்யப்பட்டுள்ளது. 2011-இல் 23 கோடியே 83 லட்சம் ரூபாய் செலவில் நிறைய இடங்களில் அம்மா செய்த திட்டம்தான் இது. ஆனால் மத்திய அரசு இப்போது நாடு முழுவதும் இந்தப் பணியைச் செய்வோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அது வரவேற்கத்தக்கது.
அதேபோல் அம்மா கொண்டு வந்த திட்டங்கள் – மாடு, ஆடு, கோழி இவற்றிற்கெல்லாம் மானியத்தோடு கடனுதவி கொடுக்கப்படும் என்று சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் எல்லாம் அம்மா செய்த திட்டம்தான் இது.
அதேபோல் சென்னை-ஹைதராபாத், சென்னை-பெங்களூரு ரயில்வே திட்டம் அறிவித்திருக்கிறார்கள். அது வரவேற்கக்கூடிய ஒன்று. மற்றபடி ஊதியம் வாங்கும் ஊழியர்களுக்கான வரி விகிதாச்சாரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது பெரிய ஏமாற்றமாக உள்ளது” என்றார்.
அண்ணா நினைவு நாளில் எடுக்கப்பட்ட உறுதிமொழியில் “துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் நாங்கள் பாடம் கற்பிப்போம். உங்கள் தலைமையில் தேர்தலைச் சந்திக்க இருப்பதாக” தகவல் இடம்பெற்றிருப்பது உண்மைதானா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “உண்மைதான். அது மக்கள் கருத்திற்கு நான் விட்டுவிடுகிறேன். மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றாகவே தெரியும். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்றார். அதை நான் விவரித்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் நமது தமிழக மக்கள் மிகவும் புத்திசாலியானவர்கள் என்றார்.
பாஜக-அதிமுக கூட்டணி ஒன்றாகச் சேர்ந்திருப்பது குறித்த கேள்விக்கு, “எங்களுடைய புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் தொண்டர்கள் களத்தில் இருப்பார்கள் என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன். எப்படி என்பது குறித்து நீங்கள் விரைவில் தெரிந்துகொள்வீர்கள்” என்றார்.
தினகரன் என்.டி.ஏ கூட்டணி குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு,“ஒவ்வொரு கட்சியும் அவரவர்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, அந்தந்தக் கட்சியில் கூட்டணி அமைத்துக்கொள்வார்கள். அதில் போய் நான் தலையிட்டு எதுவும் சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரை தலைவர் அம்மா வழியில் ஆட்சி நடக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய திட்டம். அதை நான் நல்ல முறையில் செயல்படுத்துவேன். அவ்வளவுதான் இப்போது சொல்ல முடியும்” என்றார்.
மேலும், திமுக ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்ல, மக்களும் தாக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. கிருஷ்ணராயபுரம் பகுதியில் சமீபத்தில் ஒரு கல்குவாரி அனுமதி இல்லாமல் நடத்தப்பட்டு வந்தது. அதற்கு கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்எல்ஏ முக்கிய ஆளாக இருக்கிறார். அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரையும், புகைப்படக் கலைஞரையும் 50 அடியாட்களை வைத்து, அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள். இது நடந்தது உண்மை. ஆனால் இதில் திமுகவினர் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த விசாரணை எப்படிப் போகும் என்று எனக்குத் தெரியவில்லை. அரசு இன்று இருக்கும்; நாளை மாறும். ஆனால் நடந்த நிகழ்வுக்கு அங்கிருக்கும் காவல்துறையினர் தக்க இடத்தில் பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் கூடிய விரைவில் ஏற்படும். அதனால் உண்மையாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல் நந்தனத்தில் கல்லூரியில் உள்ள கேண்டீன் திமுகவைச் சேர்ந்தவருக்கு லீசுக்கு விடப்பட்டுள்ளது. அந்த கேண்டீனில் வேலை செய்ய வந்த ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அதற்கும் திமுக காரர்கள்தான் சம்பந்தம் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. அதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பூசி மெழுகினால் அடுத்து வரப்போகும் அரசாங்கம் உங்களைச் சும்மா விடாது.
இது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மிகவும் மோசமாக உள்ளது. இதற்கு திமுகவினர் பதில் சொல்லியாக வேண்டும். அதேபோல் கிட்டத்தட்ட ஐந்து முறை முதலமைச்சர் வெளிநாடு சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். 7 நாடுகளுக்குப் போயுள்ளார். ஆனால் என்ன ஆனது? இங்கு கம்பெனிகள் உருவானதா? 33 லட்சம் பேருக்கு உடனடியாக வேலை கிடைக்கும் என்றார். வந்து ஐந்தாவது ஆண்டு.. தேர்தலையும் சந்திக்கப் போகிறோம். மாவட்டம் வாரியாக எவ்வளவு லட்சம் பேருக்கு நீங்கள் வேலை வாங்கிக் கொடுத்தீர்கள் என்பதை கொஞ்சம் வெளிப்படுத்தினீர்கள் என்றால் நன்றாக இருக்கும் என்பதையும் மக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
தவெக தலைவர் விஜய் அதிமுக கட்சியை ஊழல் கட்சி என்று கடுமையாக விமர்சித்தது குறித்த கேள்விக்கு,
“நான் ஒன்றை ஒன்று சொல்லிக்கொள்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணம் இருக்கும். அம்மா இருந்தபோது எப்படி இந்த அரசாங்கம் இருந்தது என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு குடும்பத்தாரிடமும் நீங்கள் போய்க் கேளுங்கள். அங்கு ஆட்சி எப்படி இருந்தது என்று சொல்வார்கள். நான் மீண்டும் மீண்டும் அம்மா ஆட்சி என்று சொல்வதற்கான காரணமே அதுதான். அம்மா வழியில், தலைவர் வழியில் மக்கள் ஆட்சியைக் கொண்டு வருவதற்கு 39 ஆண்டுகால அனுபவத்தில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்வேன். இந்தத் திமுக அரசை விரட்டி அடிப்போம்” என்றும் தெரிவித்தார்.
