முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்துள்ளார். அந்த கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அக்கட்சியின் ‘கறுப்பு வெள்ளை சிவப்பு- நடுவில் அண்ணா- எம்ஜிஆர்-ஜெயலலிதா’ உருவம் கொண்ட கொடியையும் அறிமுகப்படுத்தினார் சசிகலா.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டை மேட்டில் இன்று பிப்ரவரி 24-ந் தேதி நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் சசிகலா இதனை அறிவித்தார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய தயாராக இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் சசிகலா கூறியிருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி, எந்த வகையிலும் சசிகலாவை உள்ளே அனுமதிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.
அதேபோல, அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரன் தம்மிடம் சொல்லாமலேயே முடிவு எடுத்துவிட்டார் என்கிற கோபத்தில் சசிகலா இருந்தார்.
இதனையடுத்து சட்டப்பேரவைத் தேர்தலில் தமது ஆதரவாளர்கள் போட்டியிடுவார்கள் என அறிவித்தார் சசிகலா. அத்துடன் சென்னை, தஞ்சாவூரில் தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இன்று ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ”களம் காண்போம்.. அம்மாவின் ஆட்சி அமைப்போம்” என்ற முழக்கத்துடன் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து மாநாடு நடத்தினார் சசிகலா.
இம்மாநாட்டில் தாம் புதிய கட்சியைத் தொடங்கி இருப்பதாக அறிவித்த சசிகலா அக்கட்சியின் பெயரை விரைவில் அறிக்க இருப்பதாக கூறினார். மேலும் கட்சியின் கொடியையும் சசிகலா அறிமுகப்படுத்தினார்.
