சில சறுக்கல்களுக்குப் பிறகு சரியான நேரத்தில் ஒரு சிக்ஸர் அடித்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது நிவின் பாலியின் தற்போதைய நிலை. கடந்த டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியான மலையாள ஹாரர்-காமெடி திரைப்படமான ‘சர்வம் மாயா‘ (Sarvam Maya), தற்போது பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது.
125 கோடி கிளப்: அகில் சத்யன் (Akhil Sathyan) இயக்கத்தில் நிவின் பாலி நடித்திருந்த இப்படம், வெளியாகி மூன்று வாரங்களைக் கடந்துள்ள நிலையில், உலகளவில் ரூ.125 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம், நிவின் பாலியின் திரைப்பயணத்திலேயே உலகளவில் ரூ.100 கோடியைத் தாண்டிய முதல் படம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.
கேரளாவில் மட்டும் எவ்வளவு? கேரளாவைப் பொறுத்தவரை, இப்படம் சுமார் 18 நாட்களில் ரூ.62-63 கோடி வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ‘ப்ரேமம்’, ‘காயங்குளம் கொச்சுண்ணி’ போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு, நிவின் பாலிக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
படத்தின் கதை & கூட்டணி: இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ரியா ஷிபு (Riya Shibu) என்ற புதுமுகம் பேயாக நடித்துக் கலக்கியுள்ளார். மேலும், அஜு வர்கீஸ் (Aju Varghese), ப்ரீத்தி முகுந்தன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு இளம் பூசாரிக்கும், ஒரு வித்தியாசமான பேய்க்கும் இடையே நடக்கும் கலாட்டாக்கள் தான் படத்தின் கதை. பயமுறுத்தாமல் சிரிக்க வைக்கும் இந்த ஃபார்முலா, குடும்ப ரசிகர்களைத் திரையரங்குகளுக்குப் படையெடுக்க வைத்துள்ளது.
போட்டிகளைச் சமாளித்து… மோகன்லாலின் ‘வ்ருஷபா’ (Vrusshabha) போன்ற படங்கள் போட்டியாக வந்தாலும், ‘சர்வம் மாயா’ வசூலில் சளைக்காமல் முன்னேறி வருகிறது. பொங்கல் ரிலீஸ் படங்களான ‘தி ராஜா சாப்’ போன்றவை வந்த பிறகும், இப்படத்திற்கான வரவேற்பு குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“இனி நிவின் பாலி அவ்ளோதான்” என்று சொன்னவர்களுக்கெல்லாம், தனது நடிப்பாலும் வசூலாலும் தரமான பதிலடி கொடுத்துள்ளார் இந்த ‘பிரேமம்’ நாயகன்!
