இன்றைய கிரிக்கெட் உலகில் பிட்னஸ் என்பது முக்கியமான தகுதியாக தேர்வுக்குழுவால் பார்க்கப்பட்டு வருகிறது. ஏனெனில் கை நிறைய திறமை இருந்தும் அதிக எடை காரணமாக விமர்சிக்கப்பட்டு அணியில் இடம்பெற முடியாமல் தவிக்கும் வீரர்கள் பலர் உள்ளனர். அதில் முக்கியமானவராக மகாராஷ்டிராவைச் சேர்ந்த 27 வயதான சர்ஃபராஸ் கான் பார்க்கப்படுகிறார். sarfaraz khan 17kg weight loss get huge claps
இங்கிலாந்து அணிக்கு சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி விளையாடி வருகிறது. ஆனால் முதல் தர கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள போதும், பிட்னஸ் இல்லாததன் காரணமாக சர்ஃபராஸ் கான் அணியில் சேர்க்கப்படவில்லை. மேலும் அவரது உடல் குறித்து தொடர்ந்து விமர்சனங்களும் எழுந்தன.
சர்ஃபராஸ் கடைசியாக நியூசிலாந்திற்கு எதிரான சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் போது இந்தியாவுக்காக விளையாடினார். பெங்களூருவில் பரபரப்பான 150 ரன்கள் எடுத்த போதிலும், உடற்தகுதி காரணமாக ஓரிரு போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
இந்த நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக கடும் உடற்பயிற்சியின் மூலம் 17 உடல் எடையைக் குறைத்து ஆளே மாறியுள்ளார் சர்ஃபராஸ்கான். ஜிம்மில் ஸ்லிம்மாக காட்சியளிக்கும் அவரது தற்போதைய புகைப்படம் இணையத்தில் தற்போது வெளியான நிலையில் ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன், சர்ஃபராஸ்கானை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “மிகச்சிறந்த முயற்சி, இளைஞனே! மிகப்பெரிய பாராட்டுகள், இது மைதானத்தில் சிறந்த மற்றும் நிலையான செயல்திறனைப் பெற வழிவகுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்களது முன்னேற்றத்திற்காக நீங்கள் செலவிட்ட நேரத்தை நான் பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த புகைப்படத்தை யாராவது பிருத்வி ஷாவுக்குக் காட்ட முடியுமா? இது சாத்தியமானது தான்! வலிமையான உடல்,வலிமையான மனம்” என பீட்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.
பிருத்வி ஷாவும் சர்ஃபராஸ் கானை போன்றே உடல் எடைக் காரணமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தான் அவரையும் குறிப்பிட்டுள்ளார் பீட்டர்சன்.