மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் கடைசி ஆசையாக, மரணத்திற்குப் பிறகு அவருடைய இரு கண்கள் தானம் செய்யப்பட்டது. sarajo devi eyes donation to two children
எம்.ஜி.ஆர். சிவாஜி ஆகியோருடன் பல படங்களில் இணைந்து நடித்த நடிகை சரோஜா தேவி சுமார் 40 வருடங்களுக்கு மேலாக தமிழ்சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சர்ஸ்வதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். விஜய், சூர்யா உள்ளிட்டோரின் படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அவருக்கு இந்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக ஓய்வெடுத்து வந்தவர், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள தனது வீட்டில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 87.
அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் உருக்கமுடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

“கண்கள் மனித உணர்வுகளில் மிக முக்கியமானவை” என தனது வாழ்நாள் முழுவதும் சொல்லி வந்தவர் சரோஜா தேவி. அவர் தனது கடைசி ஆசையாக தான் உயிரிழந்த பிறகு கண் தானம் செய்யும்படி விருப்பம் தெரிவித்திருந்தார்.
அதன்படி, நாராயண நேத்ராலயா கண் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழு அவரது வீட்டிற்கு இன்று வந்து தான செயல்முறையை நிறைவு செய்து, அவரது இறுதி விருப்பத்தை நிறைவேற்றியது. 87 வயதை கடந்தாலும் சரோஜா தேவியின் கண்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவை இரண்டு குழந்தைகளுக்கு பொருத்தப்பட உள்ளதாகவும் மருத்துவக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே கன்னட திரையுலகைச் சேர்ந்த மறைந்த சூப்பர்ஸ்டார் டாக்டர் ராஜ்குமார் மற்றும் அவரது மகனும், நடிகருமான புனித் ராஜ்குமார் ஆகியோரின் கண்கள் இறந்த பிறகு கண் தானம் செய்யப்பட்டன. இந்த நிலையில் தற்போது பழம்பெரும் நடிகையான சரோஜா தேவியின் கண்களும் தானம் செய்யப்பட்டிப்பது மிகப்பெரிய அளவில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
சரோஜாதேவியின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் சென்னபட்னாவில் உள்ள தஷ்வாரா கிராமத்தில் நடைபெற உள்ளது. அவரது தாயார் ருத்ரம்மாவின் கல்லறைக்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.