-கப்பிகுளம் ஜெ.பிரபாகர்
தலைநகர் சென்னையில் நடக்கின்ற தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் மாநகராட்சியின் தனியார் மயத்திற்கு எதிரானதா இல்லையென்றால் தூய்மைப் பணியாளர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதா, என்ற குழப்பம் தொடக்கம் முதலே நிலவுகின்றது.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பிரச்சாரமாக முன்னெடுக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் தொடர் போராட்டமாக நடக்கிறது. வழக்கம் போல தமிழ்நாடு அரசின் உளவுத்துறையின் செயல்பாடு கேள்விக்குறியாகியுள்ளது.

சென்னையில் தூய்மைப் பணி என்பது, சிங்கப்பூர் ஓனிக்ஸ் (onyx ) நிறுவனம் – 2000 ஆம் ஆண்டு முதல் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணிகளைச் செய்து வருகிறார்கள். 2007இல் நீல்மெட்டல் பனால்கா, 2014இல் ராம்கி, 2020இல் உபேசர் சுமித் (Urabaser), சென்னை என்விரோ சொல்யூசன் (chennai Enviro) உள்ளிட்ட ஒவ்வொரு நிறுவனமாக வெவ்வேறு காலகட்டங்களில் சென்னை மாநகரின் தூய்மைப் பணியில் உள்ளே நுழைந்துள்ளார்கள்.
சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை ஆதரிக்கலாம். ஆனால், கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களை, தூய்மைப் பணிக்காக நிரந்தரம் செய்யக் கூடாது. 5 ஆண்டுக்கு மேல் தூய்மைப் பணியில் இருந்த பணியாளர்களை அல்லது அந்தக் குடும்பத்தில் ஒருவரை, சென்னை மாநகராட்சியின் பூங்கா, நூலகம், பள்ளி, சத்துணவு மையம், அம்மா உணவகம் போன்ற மாற்றுப் பணிகளில் இடமாற்றம் செய்து நிரந்தர மாநகராட்சிப் பணியாளர்களாக மாற்ற வேண்டும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சென்னை மாநகருக்கு உள்ளேயே குடியிருப்பு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
தூய்மைப் பணியில் தனியார் மயம் ஆதரிக்கப்பட வேண்டியதே. அனைத்துப் பணிகளும் தனியார் வசம் சென்று விட்டன. உதாரணமாக, வங்கிகள் முதல் மாநகராட்சி கக்கூஸ் பராமரிப்பு வரை. சென்னை மாநகர மின் பேருந்துகளில் டிரைவர், கண்டக்டர் கூட காண்ட்ராக்ட் பணியாளர்கள்தான். தூய்மைப் பணிகள் தனியார் வசம் செல்லும் போது, அனைத்து சாதியினரும் அப்பணியில் சேர்கிறார்கள். இதன் மூலமாக, குறிப்பிட்ட சாதி மக்களின் சாதி இழிவு அகலும்.

சென்னை மாநகரில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவது தனியார் நிறுவனங்களே, அதனை அரசே ஏற்று நடத்தலாம். சைக்கிள் ஸ்டாண்ட், டாய்லெட் பராமரிப்பு டெண்டர் எடுத்து நடத்துவது தனியார் முதலாளிகளே, அதனை அரசே ஏற்று நடத்தலாம். அதில் கை வைத்தால் தேர்தலுக்கு செலவு செய்ய முடியாது. அதனால் குடிநீர் லாரி, டாய்லெட் பராமரிப்பு, வாகன நிறுத்துமிடம் போன்றவற்றை அரசே ஏற்று நடத்த எந்தக் கட்சியும் குரல் கொடுக்காது.
தூய்மைப் பணி, குடிநீர் விநியோகம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் தனியார் மயத்தை இந்திய அரசு சொல்வதற்கேற்ப தமிழ்நாடு அரசும் கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டுள்ளது. கல்வி, மின்சாரம், சுகாதாரம் அனைத்துத் துறைகளிலும் தனியார்மயம் புகுந்து விட்டது. அப்படியென்றால் தூய்மைப் பணியாளர்களின் உண்மையான தேவை என்னவாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து தீர்க்க வேண்டும்.
நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள்

தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க, கூடைகள், துடைப்பங்கள், கையுறை, மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்படுவது கிடையாது.
தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றும் இடத்தில், கழிப்பறை, உடைமாற்றும் வசதிகள் கிடையாது. இரவு நேரங்களில் தூய்மைப் பணியாளர்கள், குறிப்பாக பெண் பணியாளர்கள் கழிப்பறை பயன்படுத்த எந்த வசதியும் இல்ல.
பணி நிரந்தரம் கிடையாது, குறைந்தபட்ச சம்பளம் கிடையாது.
எல்லாவற்றுக்கும் மேலாக, தனியார் நிறுவனங்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு, பேட்டரி வாகனம் கொடுத்து, நாள் ஒன்றுக்கு 450 வீடுகளில் குப்பைகள் சேகரிக்கவும், 120 முதல் 150 கிலோ வரை மக்கும் குப்பை, 15 முதல் 20 கிலோ மக்காத குப்பை, 10 கிலோ பிளாஸ்டிக் குப்பை சேகரிக்க வேண்டுமென்று டார்கெட் நிர்ணயம் செய்கிறார்கள். இது தனியார் தூய்மைப் பணியாளர்களுக்கு உளவியல் சித்திரவதையை ஏற்படுத்துகிறது.

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு, இ.எஸ்.அய்.(ESI), பி.எஃ.ப்(PF), மருத்துவக் காப்பீடு, பண்டிகை கால விடுப்பு, போனஸ் எதுவுமே கிடையாது.
இவற்றையெல்லாம் உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. தனியார் நிறுவனங்களைக் கண்காணித்து தொழிலாளர் நலத்துறையும், சென்னை மாநகராட்சி நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சுயமரியாதையுடன், மாண்புடன், தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதை தமிழ்நாடு அரசு தனது செயல்பாட்டில் உறுதி செய்ய வேண்டும்.
துறைசார்ந்த அமைச்சர் கே.என்.நேரு, போராட்டம் நடக்கின்ற பகுதியின் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் இருவரும் நேரடியாக தூய்மைப் பணியாளர்களோடு பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்.