நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தை… எகிறிய சேகர்பாபு : குமுறும் தூய்மை பணியாளர்கள்!

Published On:

| By christopher

sanitary workers protest hold on 9th day

தங்களின் மண்டலங்களை தனியார்மயப்படுத்தக் கூடாது, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 9வது நாளாக இன்று (ஆகஸ்ட் 9) வரை 2000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இரவு பகல் பாராமல் நடத்தி வரும் இந்த போராட்டக் குழுவினருடன் எட்டாம் நாளான நேற்று மதியம் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.

ADVERTISEMENT

பேச்சுவார்த்தையில் உடன்பாடில்லை!

இதனையடுத்தும் மீண்டும் இரவு 9 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படாமல் நள்ளிரவு 11:50 மணியளவில் போராட்டக் குழுவினர் வெளியேறினர். அதனையடுத்து அமைச்சர் சேகர் பாபு, பிரியா மற்றும் அதிகாரிகள் மட்டும் தனியாக ஆலோசனை நடத்தினர்.

மீண்டும் நள்ளிரவு 1:30 மணியளவில் போராட்டக் குழுவினர் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். அடுத்த 10 நிமிடத்தில் அவர்கள் வெளியேற, ரிப்பன் மாளிகையை விட்டு 1:50 மணியளவில் வெளியே வந்த அமைச்சர் சேகர் பாபுவை வாசலில் வைத்து செய்தியாளர்கள் சூழ்ந்து கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

மறுபடியும் பேச்சுவார்த்தை!

‘திமுகதானே 2021ல் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்கிறோம் என வாக்குறுதி கொடுத்தது?’ என ஒரு செய்தியாளரின் கேள்விக்கு, “இருந்தா அதை காமிங்க… இந்த போராட்டம் அமைதியான வழியில் முடியறதுக்கு கேள்வி கேளுங்க” என்றார். தொடர்ந்து நீலம் சோசியல் யூடியூப் சேனலை சேர்ந்த செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “நீங்க எந்த சேனல்? பத்திரிகையாளரை தான் சந்திக்கிறேன். உங்களை இல்லை. அவங்க கேட்கட்டும்” எனக் காட்டமாக பேசினார்.

தொடர்ந்து அவர், “அவங்களும் இந்நாட்டு மக்கள். எங்களுடன் ஒன்றி கலந்து இருக்குறவங்க. அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்லியிருக்காங்க. அரசு தரப்பில் என்ன பண்ண முடியும்னு சொல்லிருக்கோம். நாளை மதியம் மறுபடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவோம். அதன் பிறகு சுமூகமான முடிவு எடுப்போம்” என்றார்.

ADVERTISEMENT

இதற்கிடையே 9வது நாளாக போராடி வரும் தூய்மை பணியாளர்களை நமது மின்னம்பலம் யூடியூப் சேனல் வழியே நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கையை கேட்டோம்.

தனியாருக்கு அனுப்ப பிளான் பன்றாங்க!

அங்கிருந்த ஒருவர் பேசுகையில், ”நாங்க 7வது மண்டலத்துல இருந்து வர்றோம், அம்பத்தூர். அதாவது 5, 6 மண்டலத்துல தனியார் நிறுவனமான ராம்கி நிறுவனத்துக்கு கொடுக்கிறதா இருக்காங்க. அங்க 1900 பேர்கிட்ட வேலை செய்றாங்க. அவங்கள கான்ட்ராக்ட்டுக்கு அனுப்பிட்டு, அங்க இருக்கிற 800 பர்மனன்ட் தொழிலாளர்கள அம்பத்தூர்க்கு போட்டு, 7வது மண்டலத்துல இருக்கிற தொழிலாளர்கள வீட்டுக்கு அனுப்புற பிளான்ல இருக்காங்க, அதனால தான் அவங்களுக்கு நாங்க, எங்களுக்கு அவங்கன்னு போராடிட்டு இருக்கிறோம்” என்றார்.

கொள்ளை அடிக்கிறாங்க!

மற்றொரு பெண் பேசுகையில், “நாங்க வேலை பார்க்கிற இடத்துல எங்களுக்கு வேலை இல்லை. அது என்ன காரணம் கேட்டீங்கன்னா, ’தனியாருக்கு நாங்க விற்றுவிட்டோம். நீங்க தனியார்கிட்ட போய் வேலை பார்க்கணும்’ சொல்றாங்க. தனியார்கிட்ட எப்படி நாங்க போய் வேலை பார்க்கிறது? அங்க சம்பளம் ரொம்ப கம்மியா இருக்கு என்றுதான் ஃபர்ஸ்ட் இந்த போராட்டம் தொடங்கியது.

இப்போ எங்களுக்கு ஒரு ரூ.14,000 தான் கிடைக்குது. முன்னாடி எங்களுக்கு ரூ.23,377 வாங்கிக்கிட்டு இருந்தோம். அரசாங்கத்துக்குக் கீழே சென்னை மாநகராட்சி கமிஷனர் மூலமாக நாங்க வாங்கிக்கிட்டு இருந்தோம். இப்ப எங்களுக்குக் கொடுக்குற சம்பளம் ரூ.14,000 வைத்து என்ன பண்ண முடியும்? அப்போ, எங்களுக்கு எவ்வளவு அவங்க வந்து கொள்ளை அடிக்கிறாங்க பாருங்க.. கிட்டத்தட்ட எங்களுக்கு ஒரு ரூ.10,000 கிட்டப் போகுது. அந்த 10,000 இருந்தா நாங்க வாழ்க்கையில் முன்னேறுவோமா, பின்னேறுவோமா? இப்பதான் நாலு வருஷத்துல நாங்க கேஸ் போட்டு, உழைப்போர் உரிமை இயக்கம் மூலமா நாங்க வாங்கிருக்கோம். அப்ப, நாங்க முன்னுக்குப் போகணுமா, பின்னுக்குப் போகணுமான்னு சொல்லி அரசாங்கம் வந்து எங்களை இப்ப முடிவு பண்றாங்க” என்றார்.

நம்பி ஓட்டுப் போட்டதற்கு நல்ல பாடம்!

தொடர்ந்து மூத்த பெண் பணியாளர் பேசுகையில், “பணி நிரந்தரம் தான் எங்க கோரிக்கை, வேற ஒண்ணுமே கிடையாது. அரசாங்கம் வந்து இன்னைக்கு வரைக்கும் எங்களுக்கு ஒன்றும் தெரிவிக்கவில்லை. நாங்க எங்களோட கோரிக்கை தெரிவிக்கத் தெரிவிக்க, ஒவ்வொன்னா எங்களுக்கு நேர்மாறாகத்தான் நடக்குது. நாங்க எதிர்பார்க்கிறது ஒன்றுமே நடக்கவில்லை. ஆனால் ஒன்பது நாளாக நாங்க இங்கதான் இருக்கிறோம். வெயிலிலும், மழையிலும் நாங்க இங்கதான் இருக்கிறோம், ஆனால் இதுல இருந்து ஒரு முடிவு வரவில்லை.

மேயர் பிரியா எங்களிடம் வந்து, ”அந்த ஆட்சி இருக்கும்போது நீங்க ஒன்னும் கேட்கலையே?” என்று கேட்கிறார். ஆனால் அந்த ஆட்சி இருக்கும்போது நாங்க கேட்காததற்கு ஒரே ஒரு காரணம் என்னன்னா, இப்ப இருக்கிற முதலமைச்சர் ஸ்டாலின், அப்போது வந்து ”நாங்க ஆட்சிக்கு வந்து உழைப்பை நிரந்தரம் பண்றோம்“ என்று வாக்கு கொடுத்தாரு. அதனால் தான் நாங்க அந்த ஆட்சி காலத்துல ஸ்ட்ரைக் பண்ணலை. ஏனென்றால், ஸ்டாலின் வாக்கை அப்போதைக்கு நம்பினோம். ஆனால் நம்பி நாங்க ஓட்டுப் போட்டதற்கு எங்களுக்கு நல்ல ஒரு பாடம் சொல்லிக் கொடுத்திட்டாங்க” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share