பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.
தூய்மை பணிகளை தனியார்மயமாக்கக் கூடாது, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு அதிமுக, பாஜக, அமமுக, நாதக, தேமுதிக என பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
இந்தநிலையில் தூய்மை பணியாளர்களை ரிப்பன் பில்டிங் முன்பிருந்து அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஆகஸ்ட் 13) உத்தரவிட்டது.
ஆனால் அங்கிருந்து கலைந்து செல்ல தூய்மை பணியாளர்கள் மறுத்தனர். அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. “எங்கள் போராட்டம் தொடரும், முதல்வர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்” என்று தூய்மை பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்தசூழலில் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு நேற்று மாலை வந்த போலீசார் , “இங்கு போராட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்படவில்லை… இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்” என்று மைக்கில் அறிவுறுத்தியபோதும் அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை.
இதனால் அவர்களை கைது செய்ய போலீசார் தயாராகினர். சுமார் 1200 போலீசார் ரிப்பன் மாளிகை முன்பு குவிக்கப்பட்டனர். 7 கியூ பிரிவு போலீசாரும் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்தனர்.தூய்மை பணியாளர்களை கைது செய்ய 21 பேருந்துகளும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன.
ரிப்பன் மாளிகை வழியாக எந்த பக்கமும் வாகனங்கள் செல்லாதவாறு பிளாக் செய்தனர். 11.45 மணிக்கு அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 11.50 மணிக்கு அனைவரையும் கைது செய்ய தொடங்கினர்.
முதலில், தூய்மை பணியாளர்களுடன் கூட்டத்திலிருந்த எல்.டி.யு.சி கம்யூனிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்களை டார்ச் லைட் மூலம் அடையாளம் கண்டு கைது செய்து தனியே பேருந்தில் ஏற்றியதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
அவர்களை தொடர்ந்து தூய்மை பணியாளர்களை கைது செய்து, கீழ்கட்டளை, நந்தம்பாக்கம், ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடுவாங்கரை, பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களுக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தனர். சுமார் 45 நிமிடங்களில் ரிப்பன் மாளிகை முன்பிருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது,போலீசாருடன் எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சில பெண்கள் மயங்கி விழுந்தனர். பேருந்துக்குள் பெண் ஒருவர் மயங்கிக் கிடக்கும் புகைப்படமும் வெளியாகியானது. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு மாற்று இடம் வழங்க கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 14) முறையீடு செய்யப்பட்டது.

அப்போது அனுமதி பெற்று போராட்டம் நடத்த எந்த தடையும் இல்லை. அனுமதி பெற்று போராட்டம் நடத்தும் போது காவல்துறை தலையிட்டால் நீதிமன்றம் தலையிடும் என்று தலைமை நீதிபதி அமர்வு கூறியது. மனு தாக்கல் செய்யாததால் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
அதேசமயம் சட்ட விரோதமாக அடைக்கப்பட்ட தூய்மை பணியாளர்களை விடுதலை செய்யக் கோரியும் முறையீடு செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், லட்சுமி நாராயணா அமர்வு மதியம் விசாரிக்கவுள்ளது.