சிவகார்த்திகேயன், ரவி மோகன் ஆகியோர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட நிலையில் ‘சங்கி குழு பொங்கலில் பராசக்தி குழு’ என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி ஆட்சி உட்பட பல்வேறு விஷயங்களைப் பற்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேசி வருகிறார்.
கூட்டணி ஆட்சி என்று தவெக தலைவர் விஜய் கூறி வரும் நிலையில், மாணிக்கம் தாகூரின் பேச்சு கவனத்தை பெற்றது. அதேசமயம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி தமிழகத்தைச் சேர்ந்த பல காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் ஜனநாயகன் பட விவகாரத்தில் சென்சார் போர்டுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இன்னொரு பக்கம் இந்தி திணிப்புக்கு எதிரான படமான பராசக்த் திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்தநிலையில் பராசக்தி படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், வில்லன் ரவி மோகன், கெனிஷா, சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி, இசையமைப்பாளார் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று (ஜனவரி 14) டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டனர்.
இதை விமர்சித்துள்ள மாணிகம் தாகூர், “சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு. ஆனால் ஜனநாயகனுக்கு தடை விதிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
