தமிழ்நாட்டில் சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பான வழக்குகளில், அமலாக்கத்துறை விசாரணை அமைப்பாக இருக்கும்போது, மாநில காவல்துறைக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடக் கோரும் அதிகாரம் உள்ளதா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் நடந்து வரும் மணல் கொள்ளை தொடர்பான வழக்குகளில் மாநில அரசு ஒத்துழைக்கக் கோரியும், அமலாக்கத்துறை தகவலின் பேரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவிடக் கோரியும் அமலாக்கத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று (அக்டோபர் 31) நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி. அருண் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘ஒரு விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை, மற்றொரு விசாரணை அமைப்பான மாநில காவல் துறைக்கு உத்தரவிட கோரி எப்படி வழக்கு தொடர முடியும்?’ என்று கேள்வி எழுப்பினர்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ், மாநிலத்தில் பெரிய அளவிலான மணல் கொள்ளை நடந்துள்ளதற்கான ஆதாரங்களைத் திரட்டியுள்ளதாகவும், இந்த தகவல்கள் அரசுடன் பகிரப்பட்டும் இதுவரை எப்.ஐ.ஆர் எதுவும் பதிவு செய்யப்படாததால் நீதிமன்றத்தை நாடியதாகவும் தெரிவித்தார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், எப்.ஐ.ஆர் பதிவு செய்வது அமலாக்கத்துறையின் தனியுரிமை அல்ல. தகவல்களை அனுப்பி வழக்குப்பதிவு செய்ய கூறினால் அதை ஏற்க மாநில போலீஸ் ஒன்றும் போஸ்ட் மாஸ்டர் அல்ல’ என்று வாதிட்டார்.
மேலும், பெரிய அளவிலான ஊழல்கள் உ.பி, பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் நடந்தாலும் அமலாக்கத்துறைக்கு தமிழகத்தின் மீது மட்டுமே கண் இருக்கிறது என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
இதற்கு, பொதுநலன் கருதியே அமலாக்கத் துறை இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது என்று அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், அதே பொதுநலனைகாட்டி குஜராத் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
“டெல்லி காவல்துறை சம்பந்தப்பட்ட வழக்கில் போலீசாருக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இதே போன்ற ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தது. ஆனால், எந்த அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை அடுத்து அந்த மனுவை அமலாக்கத்துறை திரும்ப பெற்றது என்றும் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
