’ஒரு பெண் இன்னொரு பெண்ணைப் பாராட்டவே மாட்டார்’. இதையே ஒரு சூத்திரமாகக் கொண்டு, ‘டபுள் ஹீரோயின்’ கதைகளில் ஹீரோ டூயட் பாடுவதற்கான சூழலை இப்போதும் திரையில் காட்டி வருகின்றன தெலுங்கு திரைப்படங்கள்.
அப்படிப்பட்ட படங்கள் சிலவற்றில் நடித்தவர் நடிகை சமந்தா. ஆனால், தன்னுடன் சேர்ந்து நடிக்கிற நாயகிகளை வஞ்சகமில்லாமல் பாராட்டித் தள்ளுவார். அவர்கள் வேறு படங்களில் நடிக்கிறபோதும் தேடிப் பிடித்து வாழ்த்துவார்.
அப்படிப்பட்ட சமந்தா, ஹீரோயினை மையமாகக் கொண்ட படத்தைப் பார்த்தால் என்ன செய்வார்? இதற்கான பதில் இப்போது கிடைத்திருக்கிறது.
சமீபத்தில் ‘லோகா சேஃப்டர் 1: சந்திரா’வைப் பார்த்து ரசித்திருக்கிறார் சமந்தா. உடனே அது பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டித் தள்ளியிருக்கிறார்.
விஷுவல், சவுண்ட், ஆக்ஷன் என்று தன்னை பிரமிக்க வைத்த விஷயங்களைக் குறிப்பிட்டு ‘வாவ்’ சொன்னவர், அத்திரைப்படத்தின் ஒவ்வொரு பிரேமும் தன்னை ஈர்த்ததாகச் சொல்லியிருக்கிறார்.
“அனைத்துக்கும் மேலாக, நமது முதல் பெண் சூப்பர் ஹீரோவை திரையில் பார்த்தது தான் என் மனதில் இப்போதும் தங்கியிருக்கிறது. சந்திரா எனக்கு ‘கூஸ்பம்ஸ்’ தந்திருக்கிறார். இது நீண்டகாலம் என் மனதில் நிலைத்திருக்கும்” என்று ஹீரோயின் கல்யாணி பிரியதர்ஷனைப் பாராட்டியிருக்கிறார்.
அதற்காக சமந்தாவுக்கு நன்றி தெரிவித்துள்ள தயாரிப்பாளர் துல்கர் சல்மான், ‘நீங்கள் பாராட்டியிருப்பது எங்கள் குழுவிலுள்ள ஒவ்வொருவரையும் மிகவும் மகிழ்ச்சிப்படுத்தும்’ என்று கூறியிருக்கிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளிலும் முன்னணி ஹீரோயின்கள் ஓரளவுக்கு தங்களுக்கான மார்க்கெட் அமைந்தவுடன், தங்களது பாத்திரத்தை மையப்படுத்திய கதைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், அதையும் மீறி ‘சூப்பர் ஹீரோயின்’ பாத்திரங்களில் மிளிரவே ஆசைப்படுவார்கள். அப்படிச் சில படங்களிலும் சமந்தா நாயகியாக நடித்திருக்கிறார்.
அப்படித் தனக்குக் கிடைக்காத புகழும் பெயரும் சக நாயகிக்குக் கிடைப்பதைப் பாராட்டும் குணம் எத்தனை பேருக்கு வாய்க்கும்?!