8வது சம்பள கமிஷன் அமலுக்கு வந்தவுடன் அரசு ஊழியர்களின் சம்பள கணக்கீடு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஊழியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகள் தொடர்பான 8வது மத்திய சம்பள கமிஷன் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, குறைந்தபட்ச சம்பளம் மற்றும் ஃபிட்மென்ட் ஃபேக்டர் (fitment factor) ஆகியவை ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களிடையே முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளன.
இந்த கமிஷனின் பணிக்கான ஆணைகளின் படி, சம்பளம், படிகள் மற்றும் பிற சலுகைகளில் செய்ய வேண்டிய மாற்றங்களை பரிந்துரைக்க வேண்டும். மேலும், அரசுப் பணிகளுக்கு திறமையானவர்களை ஈர்க்கும் வகையிலும், பணியிடத்தில் செயல்திறன், பொறுப்புணர்வு மற்றும் கடமையுணர்வை மேம்படுத்தும் வகையிலும் ஒரு சம்பள கட்டமைப்பை வடிவமைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்கும் முறை அல்லது சூத்திரம் (formula) குறித்து விதிமுறைகளில் குறிப்பிடப்படவில்லை. இந்த இடைவெளியைப் பயன்படுத்தி, ஊழியர் சங்கங்கள் ஒரு புதிய அணுகுமுறையை வலியுறுத்துகின்றன. சமீபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், NC-JCM ஊழியர் தரப்பு, குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் குறித்து 8வது சம்பள கமிஷனிடம் ஒரு விரிவான முன்மொழிவை சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது.
ஊழியர் தரப்பின் வாதப்படி, குறைந்தபட்ச ஊதியம் என்பது உணவு மற்றும் வழக்கமான தேவைகளுக்கு மட்டும் வரையறுக்கப்படக்கூடாது. அவர்களின் முன்மொழிவின்படி, குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும்போது பின்வரும் அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும்:
- ஒரு வயது வந்தவருக்குத் தேவையான கலோரி அளவு.
- குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை.
- உணவு, உடை மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள்.
- அரசு ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு நுகர்வோர் கடைகளில் உள்ள உண்மையான சில்லறை விலைகள்.
- பண்டிகைகள் மற்றும் சமூகக் கடமைகளுக்கான கூடுதல் செலவுகள்.
இவை அனைத்திற்கும் மேலாக, இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப செலவுகளான மொபைல் போன்கள், இணையம் மற்றும் அன்றாட தொழில்நுட்பத் தேவைகளுக்கான செலவுகளும் இதில் அடங்க வேண்டும். இன்றைய உலகில் தொழில்நுட்பம் என்பது ஆடம்பரம் அல்ல, அது ஒரு அடிப்படைத் தேவை என்றும், எனவே குறைந்தபட்ச ஊதிய சூத்திரத்தில் அதை புறக்கணிக்க முடியாது என்றும் ஊழியர் தரப்பு வாதிடுகிறது.
7வது மத்திய சம்பள கமிஷனின் பணிக்கான ஆணைகளும் (TOR) ஏறக்குறைய இதேபோன்றவையாக இருந்தன. ஆனால், 7வது சம்பள கமிஷன், 1957ல் நடைபெற்ற 15வது இந்திய தொழிலாளர் மாநாட்டின் தரநிலைகளின் அடிப்படையில் அதன் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்தது. இந்தத் தரநிலைகள், ஒரு ஊழியர், அவரது மனைவி மற்றும் 14 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் அடங்கிய குடும்பத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தேவை அடிப்படையிலான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்தன.
இந்த முறை, ஆரோக்கியமான மற்றும் கண்ணியமான வாழ்க்கைத்தரத்தை உறுதிசெய்ய மிகவும் பொருத்தமானது என்று 7வது சம்பள கமிஷன் கருதியது. இருப்பினும், அந்த கணக்கீட்டில் மொபைல் போன்கள், வைஃபை மற்றும் இணைய அணுகல் போன்ற இன்றைய அத்தியாவசிய செலவுகள் தனித்தனியாக சேர்க்கப்படவில்லை.
இந்த இடைவெளியைத்தான் ஊழியர் தரப்பு இப்போது 8வது சம்பள கமிஷனில் நிவர்த்தி செய்யக் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் சம்பள கமிஷன் ஊழியர் தரப்பின் புதிய சூத்திரத்தையும், சிறந்த ஃபிட்மென்ட் ஃபேக்டரையும் ஏற்றுக்கொண்டால், இந்த சம்பள கமிஷன் முந்தைய கமிஷன்களை விட மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
